பிலாஸ்பூர்,
சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பட்சவுரா கிராமத்தில் மஸ்தூரி என்ற பகுதியில் அரசு மேனிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது.
இதில், பங்கேற்ற மாணவிகள் சிலர் பள்ளியிலேயே பீர் குடிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. பீர் மற்றும் அதனுடன் குளிர்பானங்களை குடிப்பது போன்றும் காட்சிகள் வெளிவந்துள்ளன.
அந்த வீடியோவில், ஒரு மேஜையின் மீது பீர் பாட்டில்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. மாணவிகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இவற்றை புகைப்படங்களாக படம் பிடித்தும், ரீல்ஸ் எடுத்து கொண்டும் மற்றும் வீடியோ பதிவும் செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, ஆசிரியர்களும் உடனிருந்துள்ளனர் என கூறப்படுகிறது. ஆனால், பள்ளியில் பீர் குடிக்க கூடாது என ஒருவரும் மாணவிகளை தடுக்கவில்லை. இது அந்த பகுதியில் உள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி பிலாஸ்பூர் மாவட்ட கல்வி அதிகாரியான டி.ஆர். சாகு விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் நடந்தது உண்மை என உறுதிப்படுத்தி உள்ளதுடன், இந்த விவகாரம் பற்றி விசாரிக்க 3 நபர் கொண்ட கமிட்டி ஒன்றையும் ஏற்படுத்தினார். சம்பவத்துடன் தொடர்புடைய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் இந்த கமிட்டியினர் வாக்குமூலங்களை பெற்று பதிவு செய்து கொண்டனர்.
இதுபற்றி மாணவிகள் விசாரணை குழுவினரிடம் கூறும்போது, வீடியோ எடுத்தபோது, கொண்டாட்டத்திற்காக பீர் பாட்டில்களை கைகளில் வைத்தபடி நாங்கள் உயர்த்தி காட்டினோம். உண்மையில் நாங்கள் பீர் குடிக்கவில்லை என கூறியுள்ளனர்.
எனினும், பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக, பள்ளியின் முதல்வர் மற்றும் கல்வி மையத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, தொடர்புடைய மாணவிகளின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என உயரதிகாரி சாகு கூறியுள்ளார்.
பள்ளியில் பீர் குடிப்பது என்பது தீவிர கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அதனால், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.