புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
72 வயதான சீதாராம் யெச்சூரி சுவாசக் குழாய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிகையில் தெரிவித்துள்ளது.
சீதாரம் யெச்சூரி கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அண்மையில் அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வருகிறார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை அவர் கவனித்து வருகிறார்.