திருநெல்வேலி: “நீதிமன்றத்திலிருந்து எனக்கு சம்மன் வரவில்லை. இருந்தபோதும் அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
பாளையங்கோட்டை வ.உ.சி. உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஒரு விழாவில் நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் இதுவரை, எனது சென்னை அலுவலகத்துக்கோ அல்லது முகாம் அலுவலகத்துக்கோ வரவில்லை.
அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து விட்டேன். நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக பத்திரிகை செய்திகளில் கூறப்பட்டிருக்கிறது. நான் நீதிமன்றத்தை மதிக்க கூடியவன். சம்மன் வரவில்லை என்பதே உண்மை. என் வழக்கறிஞர் ஆலோசனைப் படி வரும் 13-ம் தேதி நீதிமன்ற சம்மன் வந்தாலும் வராவிட்டாலும் நான் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என்றார்.