கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதிகேட்டு, 25 நாடுகளில் 130-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இச்சம்பவத்துக்கு நீதி கேட்டு 25 நாடுகளில் உள்ள 130-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் 60 நகரங்களில் இந்த போராட்டம் நடந்தது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள செர்கெல்ஸ் டார்க் சதுக்கத்தில் பெண்கள் அதிகளவில் கூடி, இந்திய பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி வங்காள மொழியில் பாட்டு பாடினர்.
லண்டனில் போராட்டம் நடத்திய மருத்துவர் தீப்தி ஜெயின், கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். உலகளாவிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த இவர் கூறுகையில், ‘‘கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது’’ என்றார்.