“மது ஒழிப்பில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” – அக்.2 மாநாடு; அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு

சென்னை: “வரும் அக்.2-ல் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் இணைய வேண்டும், அதிமுக கூட இணையலாம்.” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மனித வளத்தை பாழ்படுத்தும் மதுவை அரசே விற்பது தேசத்துக்கு விரோதமான செயல். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, அசோக்நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அக்.2-ல் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 2006-2024 காலகட்டத்தில் 1589 பேர் பலியாகியுள்ளனர்.

மரக்காணம் அருகே கடந்த ஆண்டு 14 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதன் பின்னர் கள்ளக்குறிச்சியில் 69 பேர் பலியாகியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை களத்தில் சந்தித்தபோது, அரசு இழப்பீட்டை விட மதுபான கடைகளை மூட வேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர்.

மதுக்கடைகளை முற்றாக ஒழித்தால் மட்டும் சாவுகளை தடுக்க முடியும் என கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் தொடர்ச்சியாக மாநாட்டை விசிகவின் ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தோம். மதுவிலக்கு கொள்கையை உயிர் மூச்சாக கொண்டிருந்தவர் காந்தி. அரசியல் ரீதியாக அவரோடு கொள்கை முரண் இருந்தாலும் மதுவிலக்கு, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளில் உடன்படுகிறோம்.

தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட வேண்டும். 2016-ல் திமுக தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி அளித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்.

மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட கால அட்டவணையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மதுவால் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் வரும்போது ஏன் மறுவாழ்வு மையங்கள் இல்லை. ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மனித வளத்தை பாழ்படுத்தும் மதுவை அரசே விற்பது தேசத்துக்கு விரோதமான செயல். இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக முழு மதுவிலக்கு கொள்கைக்கான செயல்திட்டத்தை வரையறுக்க வேண்டும். எந்த போதை பொருளும் கூடாது என்பதே விசிக நிலைப்பாடு. மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அதிமுகவும் தயங்குகிறது. வேண்டுமானால் அவர்கள் மாநாட்டுக்கு வரட்டும். எந்த காட்சியும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது.

இதை தேர்தலோடு பொருத்தி பார்க்க வேண்டியதில்லை. விசிகவின் தேர்தல் அரசியல், நிலைப்பாடு முற்றிலும் வேறானது. மக்களின் பிரச்சினைக்காக மதவாத, சாதியவாத சக்திகளை தவிர அனைவரோடும் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. முதல்முறையாக மாநாடு நடத்துவதால் அவர்கள் சிக்கலாக பார்க்கின்றனர். மாநாட்டுக்கு எல்லோருக்குமே நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என் வாழ்த்துகள். போதை பொருள் புழக்கம் முற்றாக தடுக்கப்படவேண்டும் என்பதில் இருந்து அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியது தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்வில், விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ, வன்னியரசு, ஆதவ் அர்ஜுனா, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.