மாணவர் போராட்டம் எதிரொலி | மணிப்பூரில் 3 மாவட்டங்களில் தடை உத்தரவு

இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, 3 மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தடுக்கும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு, இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும், தவுபால் நகரில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்பால் கிழக்கு மாவட்ட ஆட்சியர் இன்று (10.09.2024) காலை பிறப்பித்த உத்தரவில், “மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பில் அதிகரித்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கான முந்தைய உத்தரவுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை இது உடனடியாக அமலுக்கு வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இம்பால் மேற்கு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த மற்றொரு உத்தரவில், “ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கான முந்தைய அனைத்து உத்தரவுகளும் இன்று (செப்டம்பர் 10) காலை 11 மணி முதல் முடிவுக்கு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் மக்கள் அந்தந்த குடியிருப்புகளுக்கு வெளியே நடமாடுவதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஊரடங்கு உத்தரவு காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தளர்த்தப்பட்டது. தற்போது அந்த தளர்வு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஊடகங்கள், மின்சாரம், நீதிமன்றம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்குச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைச் சமாளிக்க முடியாத மாநில காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை நீக்கக் கோரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதை அடுத்து, இம்பால் மாவட்டங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை (செப்டம்பர் 9, 2024) தவுபால் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒரு மாணவரின் தொடையில் குண்டு துளைத்தது. இதை அடுத்து, தவுபாலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று (செப்டம்பர் 9, 2024) மணிப்பூர் தலைமை செயலகம் மற்றும் ராஜ்பவன் முன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். மேலும், மாநிலத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை உள்ளடக்கிய புதிய வன்முறை காரணமாக 8 பேர் இறந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, முதல்வர் பைரோன் சிங் மற்றும் ஆளுநர் ஆச்சார்யாவை மாணவர்கள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் பிரதிநிதிகள், “வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை இயக்குநர் மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பதவி நீக்கம் செய்வது உட்பட 6 கோரிக்கைகளை வைத்துள்ளோம். மாநிலத்தின் நிர்வாக ஒருமைப்பாட்டை மாற்றாமல் விரைவில் அமைதி தீர்வை எட்ட நாங்கள் விரும்புகிறோம்.” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.