வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பட்ஜெட் அலுவலக முன்னாள் பொது ஆலோசகர் மார்க் பாலெட்டா கூறியுள்ளதாவது:
ஜோ பைடன் பதவியேற்றது முதல் 957 நாட்களில் 40 சதவீதத்தை தனிப்பட்ட தனது இரவு பயணங்களுக்காக செலவிட்டதாக நியூயார் போஸ்ட் ஊடகத்திலும் செய்தி வெளியாகி உள்ளது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, எல்லை பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஸ்திரமின்மை உள்ளிட்ட எந்த கவலையும் பைடனுக்கு கிடையாது. அதனால்தான் 48 ஆண்டுகள் எடுக்க வேண்டிய விடுமுறையை 4 ஆண்டுகளில் கழித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் தனது அதிபர் பதவி காலத்தில் 26 சதவீதத்தை மட்டுமே தனது தனிப்பட்ட பயணங்களுக்காக செலவிட்டார். அதேநேரத்தில் ரொனால்ட்ரீகன் மற்றும் பராக் ஒபாமா இருவரும் தலா 11% விடுமுறையை மட்டுமே எடுத்தனர். ஒரு முறைமட்டுமே அதிபர் பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர் 79 நாட்டுகள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.
ஆனால், தற்போதைய அதிபர் பைடன் 4 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 532 நாட்களை ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக செலவிட்டுள்ளார். ஆண்டுக்கு சராசரியாக 11 நாட்கள் விடுமுறைகாலம் என்ற நிலையில், 48 ஆண்டுகள் எடுக்க வேண்டிய விடுமுறையை பைடன் நான்கே ஆண்டுகளில் அனுபவித்துள்ளார்.
இவ்வாறு மார்க் பாலெட்டா தெரிவித்துள்ளார். பைடனின் உதவியாளர்கள் கூறுகையில், “முந்தைய அதிபர்களை போலவே பைடனும்தொலைதூரத்தில் இருந்து வேலைசெய்கிறார். விடுமுறையின்போது அவரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.