மும்பை: கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
பின்னர் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்தவகையில் மும்பையின் கிங்ஸ் சர்கிள் பகுதியில் 70-வது ஆண்டாககவுட் சரஸ்வத் பிராமின் (ஜிஎஸ்பி)சேவா மண்டல் அமைப்பின் சார்பில்விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத களிமண், இயற்கை வண்ணம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு காகிதம்,பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் அமித் பாய் கூறும்போது, “இங்குள்ள விநாயகர் சிலை 66 கிலோ தங்கம், 325 கிலோ வெள்ளி மற்றும் இதர விலை உயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவை ஆகும். இதனால் இந்த விநாயகர் நாட்டிலேயே விலை உயர்ந்தவராக கருதப்படுகிறார். இதையடுத்து, இந்த விநாயகர் சிலை அமைந்துள்ள பந்தல் ரூ.400 கோடிக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த ஆண்டு இதே இடத்தில் அமைக்கப்பட்ட விநாயகர் பந்தலுக்கு ரூ.360 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டுஅந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. திருட்டு, தீ விபத்து, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடர்களால் இந்த விநாயகருக்கு சேதம் ஏற்பட்டால் அதை காப்பீட்டு நிறுவனம் ஈடுகட்டும். மேலும்,பூசாரிகள், பக்தர்கள், பணியாளர்கள், பாதுகாவலர்கள் மட்டுமல்லாது பந்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுக்கும் இந்த காப்பீடு பொருந்தும்.