பீகார் மாநிலத்தில் ஒரு பெண் தற்கொலை செய்வதற்காக ரயில் தண்டவாளத்தில் சென்று படுத்தார். அவரை எழுப்பிப் போகும்படி ரயில்வே மோட்டார் கேட்டுக்கொண்டது சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மோதிஹரி மாவட்டத்தில் உள்ள சகியா ரயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் படுத்தார். அவர் படுத்து நேரமாகியும் ரயில் வரவில்லை. அதனால் அப்பெண் அப்படியே உறங்கிவிட்டார். அவர் உறங்கிய பிறகுதான் அந்த வழியாக ரயில் ஒன்று வந்தது. அருகில் ரயில் நிலையம் இருந்ததால் ரயில் சற்று குறைந்த வேகத்தில் வந்தது.
தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்திருப்பதை ரயில்வே மோட்டார்மென் பார்த்துவிட்டார். இதனால் சுதாரித்துக்கொண்டு மோட்டார்மென் ரயிலை பிரேக் போட்டு வேகத்தைக் குறைத்தார். அப்பெண் அருகில் ரயில் வந்து நின்றது. மோட்டார்மென் இறங்கி வந்து அப்பெண்ணை எழுப்பியபோது அவர் உறங்கிக்கொண்டிருந்தார். அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி தண்டவாளத்திலிருந்து வெளியேறும்படி கூறினார். ஆனால் உறக்கத்திலிருந்து எழுந்த அப்பெண் அங்கிருந்து நகர மறுத்தார். அதற்குள் அங்குப் பொதுமக்களும் கூடினர்.
அதில் ஒரு பெண் வந்து தண்டவாளத்தில் அமர்ந்திருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அப்படியும் ரயில் தண்டவாளத்திலிருந்து நகர முடியாது என்றும் தற்கொலை செய்யப்போகிறேன் என்றும் அப்பெண் கூறியிருக்கிறார். உடனே மற்றொரு பெண் அவரை வலுக்கட்டாயமாகத் தண்டவாளத்திலிருந்து வெளியில் இழுத்துச் சென்றார். அப்படியும் ரயில் தண்டவாளத்திற்கு வர அப்பெண் துடித்தார். ரயில் ஒலி எழுப்பியபடி புறப்பட்டது. உடனே அதில் பாய அப்பெண் முயன்றார். ஆனால் அவரை பெண்கள் பிடித்துக்கொண்டனர்.
என்ன காரணத்திற்காகத் தற்கொலை செய்கிறார் என்று சொல்லவில்லை. கடந்த மாதம் 6ம் தேதி வயதான பெண் ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்தார். அவரும் உறங்கிவிட்டார். அவரை சரக்கு ரயிலின் சில பெட்டிகள் கடந்து சென்றது. ஆனால் ரயிலால் அப்பெண்ணிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவரை பிறகு தண்டவாளத்திலிருந்து காயம் இல்லாமல் மீட்டனர்.