2கே கிட்ஸுக்கு பின்னணி குரல் கலைஞர் சவிதாவின் குரல் மிகவும் பரிச்சயமானது.
‘வாலி’ சிம்ரன் தொடங்கி இன்றைய ‘லவ் டுடே’ இவானா வரை பலருக்கும் குரல் கொடுத்து வருகிறார் சவிதா. ‘கோட்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களுக்கும் இவர் குரல் கொடுத்திருக்கிறார். அதுவும் ஒன்றல்ல இரண்டு! சிநேகாவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். அதே சமயம் லைலாவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். லைலாவுக்கே உரித்த பாணியில் குரலைக் கொடுத்து ஒரே திரைப்படத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு வேறுபாடுகளைக் காட்டி அசத்தியிருக்கிறார் சவிதா. ‘கோட்’ படத்துக்காக அமெரிக்காவில் வசிக்கும் அவரை தொடர்புக் கொண்டு பேசினோம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
“படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. தியேட்டர்ல பார்க்கும்போது ரொம்பவே வித்தியாசமாக இருந்துச்சு. நீங்கதான் மக்கள் என்னென்ன விஷயங்கள் சொல்றாங்கனு சொல்லணும்… இந்த படத்துல நான் சிநேகாவுக்கும் லைலாவுக்கும் குரல் கொடுத்திருக்கேன். இவங்களோட கதாபாத்திரங்களுக்கு முதல்ல சிலரை வச்சு டெஸ்ட் பண்ணி பார்த்ததாகச் சொன்னாங்க. ரெண்டு பேரை வச்சு டெஸ்ட் பண்ணினதுக்குப் பிறகு சவிதாவை வச்சு பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்கனும் சொன்னாங்க. நான் இப்போ அமெரிக்காவுல இருக்கேன். படத்தோட கிராபிக்ஸ் வேலைகள் லாஸ் ஏஞ்சல்ஸ்லதான் நடந்துச்சு. அதே போல என்னுடைய டப்பிங் வேலைகளும் இங்கையேதான் நடந்துச்சு.
நான் சில நேரங்கள்ல சென்னைல இருப்பேன். சில நேரங்கள்ல அமெரிக்காவுல இருப்பேன். இங்க இருந்தே பண்றது கஷ்டம்னு பீல் பண்ணினால் கண்டிப்பாக நேர்ல போய் டப்பிங் பண்ணுவேன். ‘கோட்’ படத்துல முதல்ல நான் சிநேகாவுக்குதான் குரல் கொடுத்தேன். அப்படியே லைலாவுக்கும் பண்ணிடுங்கனு சொன்னாங்க. அதுக்குப் பிறகு சிநேகாவோட காட்சிகளை முடிச்சிட்டு லைலாவுக்குக் கொடுத்தேன்
நான் லைலாவுக்கு குரல் கொடுத்ததும் ‘அப்படியே லைலா பேசுற மாதிரியே இருக்கு’னு சொன்னாங்க. இதுல சவால்கள் எதுவும் இல்லை. ஈஸியாகதான் இருந்துச்சு…” என சிரித்தவர், “இந்த மாதிரி ரெண்டு பேருக்கு குரல் கொடுக்கிறது இது முதல் முறை அல்ல. இதுக்கு முன்னாடியே ஒரே படத்துல வர்ற இரண்டு கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுத்திருக்கேன். ’12-B’ படத்துல ஜோதிகாவுக்கும் சிம்ரனுக்கும் குரல் கொடுத்தேன்.
அப்புறம்… பிதாமகன் படத்துல லைலாவுக்கும் சிம்ரனுக்கும் குரல் கொடுத்தேன்.” என ‘கோட்’ திரைப்படம் தொடர்பாக முழுவதையும் எடுத்துக் கூறினார். ஒவ்வொரு கலைஞனுக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு நபர் கொடுத்த கமென்ட் எப்போதும் ஸ்பெஷலானதாக இருக்கும்.
இது பற்றி கேட்கையில்…” (சிரித்துக் கொண்டே) ஆனந்த விகடன்ல வந்த கமென்ட்தான். சிம்ரன் சம்பளத்துல பாதி சம்பளம் இவங்களுக்கு கொடுக்கலாம்னு எழுதினாங்க. அதே மாதிரி இப்போதும் இன்ஸ்டாகிராம்ல முகம் தெரியாத பலரும் என்னுடைய வேலைகள் பத்தி சொல்றது எப்போதும் ஸ்பெஷல். அதே சமயம் நான்தான் இந்த கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்திருக்கேன்னு கண்டிப்பிடிக்காம இருக்கிறதுதான் எனக்கு கிடைக்கிற பாராட்டாக நினைக்கிறேன். அப்படி கண்டுப்பிடிக்காமல் இருந்தால்தான் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நான் குரல் கொடுத்திருக்கேன்னு அர்த்தம்.” என்றார் அழுத்தமாக!
“என்னுடைய கரியர்ல நான் இப்போ வரைக்கும் 15 வயசு பெண்ணுக்கும், 50 வயசு பெண்ணுக்கும் குரல் கொடுத்திட்டு இருக்கேன். நத்திங் இஸ் ஈஸி. நான் இப்போ நிறைய பேருக்கு டப்பிங் தொடர்பாகச் சொல்லி தர்றேன்.” என்ற அவரிடம் ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் டப்பிங் கலைஞர்களுக்கு பாதகமாக அமையுமா? எனக் கேள்வி எழுப்பினோம்.
அவர், “அப்படிலாம் இல்ல. டெக்னாலஜி ஓவ்வொரு தலைமுறைக்கும் மாறிகிட்டேதான் இருக்கும். அதுக்கேத்த மாதிரி நம்மை மாத்திக்கணும். டெக்னாலஜி முன்னேற்றம் காணும்போதும் நாமும் முன்னேறணும். அதுதான் வளர்ச்சி. அப்படியான டெக்னாலஜியினாலதான் நான் இன்னைக்கு இங்க இருந்தே டப்பிங் பண்றேன்!” என முடித்துக் கொண்டார்.