சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்கிற பெயரில் அறிவியலுக்கு மாறாகப் பேசி சர்ச்சையிலும் வழக்கிலும் சிக்கியிருக்கிறார் மஹா விஷ்ணு.
அந்தச் சொற்பொழிவில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசி மாணவர்களிடையே பிற்போக்கான விஷயங்களைப் பரப்பியிருக்கிறார் மஹா விஷ்ணு. மஹா விஷ்ணு அடிப்படையில் ஒரு மேடைப் பேச்சாளர். தன்னுடைய சிறு வயதில் பல மேடைகளில் பேசி கைதட்டல்களைப் பெற்றிருக்கிறார். அன்றைய தேதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இப்படியானவர் திரைத்துறையிலும் தடம் பதிக்க ஆசைப்பட்டு, ‘நான் செய்த குறும்பு’ என்ற படத்தை எடுக்கப் பூஜை போட்டு, படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் ‘கயல்’ சந்திரன், நடிகை அஞ்சு குரியன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவித்துப் படத்தின் போஸ்டரையும் வெளியிட்டார்கள். மஹா விஷ்ணு தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சையால் அத்திரைப்படத்தின் போஸ்டரை பலரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இத்திரைப்படம் என்ன ஆனது, படப்பிடிப்பு முடிந்ததா போன்ற கேள்விகளோடு இத்திரைப்படத்தில் நடித்த ‘கயல்’ சந்திரனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், “ஆமாங்க, அந்தப் படத்தோட ஷூட்டிங் பாதியிலேயே நின்னுடுச்சு. அவர் முதல்ல சில ஹீரோக்களுக்கு இந்த கதையை சொல்லியிருந்தார். அப்புறம் ‘ரூபாய்’ படத்தோட ரிலீஸுக்கு பிறகு இந்த படம் என்கிட்ட வந்துச்சு. அந்த படத்தை நானே பண்ணலாம்னு இருக்கும்போது ரெண்டு மூணு தயாரிப்பாளர்கள்கிட்ட கை மாறிடுச்சு.
அதுக்குப் பிறகு நானும் அவருமே சேர்ந்து பண்ணலாம்னு யோசிச்சு ஆபிஸ்லாம் போட்டோம். அது எதுவும் வொர்க் ஆகல. ரொம்பவே குறுகிய காலம்தான் ஷூட்டிங் பண்ணினோம். அதை ஷூட்னுகூட சொல்ல முடியாது. அது டெஸ்ட் & டிரையல் மாதிரிதான். சோசியல் மீடியாவுல சொல்ற மாதிரி அவர் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டதால படத்தைவிட்டு வெளிய போகல. அந்த படம் நடக்கல. அந்த இடைவேளைல அவருக்கு அப்படியான எண்ணம் வந்திருக்கலாம். இதுதான் உண்மை. சோசியல் மீடியால சொல்றபடி பார்த்தாலும், அப்படியான எண்ணத்துல படத்தை தொடராமல் வெளிய போகுறதுக்கு எந்தவொரு தயாரிப்பாளரும் விடமாட்டாங்க. அந்த படம் டேக் ஆஃப் ஆகல.” எனக் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: