நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள ‘ஐசி-814 தி கந்தஹார் ஹைஜாக்’ வெப் சீரிஸ் மீது பா.ஜ.க கடும் விமர்சனப் பார்வையை முன்வைத்துள்ளது.
கடந்த 1999 டிசம்பர் 24-ல் ‘ஐசி-814’ என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. மசூத் அஸார், உமர் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்தே அந்த விமானம் மீட்கப்பட்டது.
அந்த ஹைஜாக் மூலம் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் மிக முக்கியமானவர்தான் மசூத் அஸார். அவர் விடுவிக்கப்பட்டதன் விளைவாக இந்தியா சந்தித்த பாதிப்புகள் ஏராளம். அதன் பின்புலத்தையும், மசூத் ஆஸார் உருவான கதையும் இங்கே…
‘தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக் கூடாது’ என்று சொல்வார்கள். இதற்கு உதாரணம்தான், 1999 விமானக் கடத்தல் சம்பவத்தின்போது இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட மூவரில் ஒருவரான முஹம்மது மசூத் அஸார் அல்வி.
உருவத்தில் குள்ளமான, சற்றே பருமனான தோற்றம் கொண்ட, ஒருகாலத்தில் பயங்கரவாத பயிற்சியில் உடற்தகுதி இல்லாததால் நிராகரிப்பட்ட மசூத் அஸார், பின்னாட்களில் உலக அளவில் பயங்கரவாதிகளால் ஹீரோவாக போற்றப்பட்டார். ஐசி 814 விமான கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து சிறையிலிருந்து விடுதலையாகி, ஜெய்ஷ்-இ-முஹம்மது என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் மசூத்.
இதுவே ஸ்ரீநகரிலிருந்த இந்திய ராணுவ தலைமையக தாக்குதல், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தாக்குதல், டெல்லி நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் தாக்குதல், இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் எனப் பல கோரச் சம்பவங்களுக்கு வழிவகுத்தது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததாக 1994-ஆம் ஆண்டு மசூத் அஸாரை காஷ்மீரில் இந்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர், 2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டார்.
அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முஹம்மது மற்றும் லஷ்கர்-இ-தய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தபோது, அது இந்தியா – பாகிஸ்தான் இடையே மிகப் பெரிய சண்டை நடக்கக் காரணமாக அமைந்தது.
தொடர்ந்து அல்-கய்தா மற்றும் ஒசாமா பின்லேடனுடன் இணைந்து பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மசூத் அஸார், தனது குற்றங்களுக்கு எந்தவித தண்டனையையும் அனுபவிக்காமல் பாகிஸ்தான் அரசால் பாதுகாக்கப்பட்டார்.
மேலும், பஹவல்பூர் நகரில் தனது ஜெய்ஷ்-இ-முஹம்மது அமைப்புக்கென ஒரு கோட்டையையே எழுப்பிப் பல பிரிவுகளை உருவாக்கியிருந்தார். 2009-ஆம் ஆண்டு அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய நிருபரை வைத்து 5 ஏக்கர் பரப்பளவும், உயர்ந்த சுற்றுச்சுவர்களும், கூடவே நீச்சல் குளங்கள், அலங்கார செயற்கை நீரூற்று கொண்ட அந்தக் கோட்டையைப் படம்பிடித்து உலகுக்குக் காட்டியது.
2016 பதான்கோட் தாக்குதல் உட்படக் கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் நடந்து வந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-இ-முஹம்மது காரணமாகச் சொல்லப்பட்டது.
இந்திய மக்களால் மறக்க முடியாத 2019 புல்வாமா தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும் கூட பாகிஸ்தான் அரசு மசூதுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முஹம்மது மீதான தடைக்கு ஆதரவளித்திருந்த சீனா, மசூதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் அனைத்து முயற்சிகளிலிருந்து பின்வாங்கியது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்து பலமுறை மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த போதிலும், சீனா இறங்கி வரவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பட்டியலில் மசூத் அஸார் சேர்க்கப்பட்டிருந்தால், அவருடைய சர்வதேச பயணங்களும், சொத்துக்களும் முடக்கப்பட்டிருக்கக் கூடும்.
1994-ஆம் ஆண்டு இந்திய அரசால் மசூத் அஸார் கைது செய்யப்பட்டபோது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடைய ஆரம்பக்கால வாழ்க்கை குறித்து வாக்குமூலம் அளித்திருந்தார்.
1968-ல் பஹவல்பூரில் ஓர் அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் மகனாகப் பிறந்த அவர், எட்டாம் வகுப்புக்குப் பிறகு கராச்சியில் பயின்றார். 1989-ஆம் ஆண்டில் வெளியுலகம் வந்தார்.
கராச்சி மதரஸாவில் தன்னுடன் பயின்ற வங்கதேசம், சூடான் மற்றும் பல்வேறு அரபு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன், ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்க அனுப்பப்பட்டார். இதற்காக அவர்களுக்கு நிதியுதவி செய்தது அமெரிக்கா.
அந்தக் காலகட்டத்தில், ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பில் இணைந்து (இந்த அமைப்புதான் 1999ல் இந்திய விமானத்தை மசூத் அஸாரின் விடுதலைக்காகக் கடத்தியது) சண்டையிடத் தேர்வானார். ஆனால் தன்னுடைய ‘மோசமான’ உடல்வாகு காரணமாக 40 நாட்கள் கட்டாய பயிற்சியை அவரால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இதனால் அந்த அமைப்பின் சதா-இ-முஜாஹித் என்ற மாத இதழில் பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்குப் பல ஆண்டுகள் பணியாற்றி, அமைப்பின் பல்வேறு தலைவர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்ட மசூத், ஹர்கத்-உல்-ஜிஹாத் இஸ்லாமி மற்றும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்புகளை இணைத்து ஹர்கத்-உல்-அன்சர் என்ற அமைப்பு உருவாக மூளையாக இருந்தார்.
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்காகக் காஷ்மீர் சென்றபோதுதான் 1994-ல் மசூத் அஸார் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்தபோது சக கைதிகள் பலரை அவர் தொடர்ந்து மூளைச்சலவை செய்ததாகக் கூறப்பட்டது. அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர ஹர்கத்-உல்-அன்சர் கமாண்டராக இருந்த சஜ்ஜாத் அஃப்கானி பலவழிகளில் முயன்றும், எந்தத் திட்டமும் கைகொடுக்கவில்லை.
காஷ்மீரின் கோட் பல்வால் சிறையிலிருந்து அஸாரை தப்பிக்க வைக்க அஃப்கானி குழுவினர் தோண்டிய சுரங்கத்தில் அஸாரின் பருத்த உடலால் நுழைய முடியவில்லை. இந்த முயற்சியில் அஃப்கானி கொல்லப்பட்டார்.
1999-ல், விமான பயணிகளின் உயிருக்குப் பிணையாகப் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மசூத் அஸார், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவின் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பார் என்றோ, பாகிஸ்தான் அவரை எந்தவித நடவடிக்கையும் இன்றி பாதுகாக்கும் என்றோ அப்போதைய உளவுத் துறை அதிகாரியாகவும், இப்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவல் உள்ளிட்ட யாரும் கற்பனை செய்திருக்கவில்லை.
கடந்த ஜனவரியில் ஒரு வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அஸார் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வைரலானது. ஆனால், சீக்கிரமே அந்த பதிவு போலி என்பது நிரூபணமானது. தற்போது அஸாரின் இருப்பிடம் குறித்த சரியான தகவல்கள் எதுவுமில்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் கடுமையான சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1999-ஆம் ஆண்டு கையறு நிலையில், மசூத் அஸாரை விடுவித்ததன் மூலம், தொடர்ந்து பல கட்டங்களில் இந்தியா அதற்கான விலையைக் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.