ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கிள் லிரிக் ‘மனசிலாயோ’ வீடியோ நேற்று வெளியானது. மலேசியா வாசுதேவனின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீடு இம்மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். விழாவில் இயக்குநர்கள் லோகேஷும், நெல்சனும் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இப்படி ஒரு சூழலில் திடீரென சமூக வலைதளங்களில் படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதாவது படத்தின் முக்கியமான காட்சி ஒன்று ரீ ஷூட் செய்ய வேண்டியுள்ளது உள்ளது என்றும் இதற்காக மூன்று நாட்கள் ரீஷூட் செய்கின்றனர். இதனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கொஞ்சம் தள்ளிப்போகலாம். இதனால் அக்டோபர் 10-ம் தேதி படம் வெளிவராமல் போகலாம் என்பதால் அதே தினத்தில் சூர்யாவின் படத்தை திரைக்கு கொண்டு வர வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து பட வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இது.
”படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினி, துஷாரா, ரித்திகா சிங் என நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் டப்பிங் பேசியுள்ளனர். ராணா உள்பட சிலரின் டப்பிங், ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஆக, வரும் வாரத்திற்குள் மொத்த டப்பிங் வேலைகளும் முடிந்துவிடும். ரீஷூட் குறித்த செய்திகளில் உண்மையில்லை. எல்லா சீன்களும் பக்காவாக ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. இம்மாதத்திற்குள் படம் ரெடியாவிடும். எனவே படம் திட்டமிட்டபடி அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: