அமெரிக்கா: “அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு தான் எனது வாக்கு” என பிரபல அமெரிக்க பாப் சிங்கர் டெய்லர் ஸ்விஃப்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதத்துக்குப் பிறகு டெய்லர் ஸ்விஃப்ட் இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “உங்களைப் போல நானும் இரவு நடந்த விவாதத்தை பார்த்தேன். நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கிறேன். ஏனென்றால் அவர் உரிமைகளுக்காக போராடுகிறார். அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன். நாம் குழப்பமில்லாமல், அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் டிம் வால்ஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் அவரின் அந்த முடிவால் நான் ஈர்க்கப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “டொனால்ட் ட்ரம்பை அதிபர் தேர்தலில் நான் ஆதரிக்கும் பொய்யான ‘ஏஐ’ படங்களை ட்ரம்ப் அவரது தளத்தில் பதிவிட்டிருந்ததை அறிந்தேன். ‘ஏஐ’ குறித்த எனது அச்சத்தையும், தவறான தகவல்களை பரப்புவதால் ஏற்படும் ஆபத்தையும் இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது. ஒரு வாக்காளராக இந்த தேர்தலில் எனது நிலைப்பாடு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இந்த சம்பவம் என்னை கொண்டு வந்தது. தவறான தகவல்களை எதிர்த்து போராடுவதற்கான எளிய வழி உண்மை மட்டுமே. என்னளவில் நான் ஆய்வு செய்து என்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளேன். உங்களுடைய ஆய்வும், தேர்வும் உங்களைச் சார்ந்தது. முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். “நீங்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.