சிங்கப்பூர்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு உடல்நல சவால்களுக்கு மத்தியில் போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு திமோர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
87 வயதான போப் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பயணம் இதுவாகும். கடந்த 2-ந்தேதி தனது ஆசிய சுற்றுப்பயணத்தை தொடங்கிய போப் பிரான்சிஸ், பயணத்தின் இறுதிக் கட்டமாக இன்று சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இதற்கு முன்னதாக, மறைந்த போப் 2-ம் ஜான் பால் கடந்த 1986-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வருகை தந்து சுமார் 5 மணி நேரம் தங்கியிருந்தார். அதன் பின்னர், போப் பிரான்சிஸ் தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார் .
போப் பிரான்சிசை சிங்கப்பூரின் கலாசார மந்திரி எட்வின் டாங் நேரில் சென்று வரவேற்றார். மேலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாடிகன் மற்றும் சிங்கப்பூர் கொடிகளை ஏந்தியபடி போப் பிரான்சிசை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நாளை சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் ஆகியோரை போப் பிரான்சிஸ் சந்திக்க உள்ளார்.
பின்னர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் போப் பிரான்சிஸ் உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து தேசிய அரங்கத்தில் போப் பிரான்சிஸ் நடத்தும் பிரார்த்தனை கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.