இன்னும் கோபம் அடங்கலையோ? ஷமியின் படிப்பை வைத்து கிண்டலடித்த முன்னாள் மனைவி

காயம் காரணமாக  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை அவரது முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் மீண்டும் ஒருமுறை விமர்சித்திருக்கிறார். முகமது ஷமி படிப்பறிவில்லாதவர் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திட்டி பதிவிட்டுள்ளார். இதேபோன்று ஹசீன் ஜஹான் பலமுறை முகமது ஷமியை விமர்சித்திருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை அவரை சீண்டியிருக்கிறார். முகமது ஷமி காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். 

அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் கூட விளையாடாத அவர், அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முழுமையாக தயாராகிக் கொண்டிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். அதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இப்போது முழுநேரமாக வேகப்பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை என்றாலும், அடுத்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

இந்த சூழலில் முகமது ஷமி தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதனை பார்த்துவிட்டு தான் அவருடைய முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான், தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். ஹசீன் ஜஹான் பதிவில், ” ஒரு ஆண் விரும்பி காதலிக்கிறான், ஒரு பெண் நம்பி காதலிக்கிறாள்” என்ற வாய்ஸ்நோட் உள்ளது. மேலும், முகமது ஷமியின் ஹேர்ஸ்டைலுக்கு கிண்டலான எமோஜியை போட்டிருக்கும் ஜஹான், ஷமி படிப்பறிவில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளார்.

ஹசீன் ஜஹானின் கல்வி

முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தாவில் படித்தவர். பள்ளிப்படிப்பை கடுவாவில் உள்ள பாரதி பவனில் முடித்த அவர், உயர் கல்விக்காக கொல்கத்தாவில் உள்ள கல்லூரிக்கு சென்றார். அங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டம் பெற்றார். பின்னர் ஹசின் ஜஹான் மாடலிங் துறையில் நுழைந்தார். ஐபிஎல் போட்டியின்போது தான் ஷமியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் சுமூகமாக இல்லாததால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முகமது ஷமி படிப்பு என்ன?

முகமது ஷமி உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள சஹாஸ்பூரை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு விவசாயி. அதிகம் படிக்காத முகமது ஷமி, 15 வயதில் கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல ஆரம்பித்தார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். மொராதாபாத்தில் உள்ள அமீர் ஹசன் கான் பிஜி கல்லூரியில் டிப்ளமோ அட்மிஷன் போட்டிருந்தாலும், டிகிரியை முடிக்கவில்லை. இதனை வைத்துதான் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் அவரை படிப்பறிவில்லாதவர் என விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.