கொல்கத்தா: பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்திவரும் கொல்கத்தா மருத்துவர்கள், பணிக்கு திரும்புமாறு உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவை ஏற்க மறுத்துவிட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு செப்.10-ம் தேதி (நேற்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
ஆனால், இதை ஏற்க ஜூனியர் மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மேற்கு வங்க அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சால்ட் லேக் பகுதியில் சுகாதாரத் துறை செயலகம் அமைந்துள்ள ஸ்வஸ்த்யா பவனை நோக்கி நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் நேற்று பேரணியாக சென்றனர்.
கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வினீத் கோயல், சுதாதாரத் துறை செயலர், இயக்குநர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டம் தீவிரம் அடைந்ததால், ஸ்வஸ்த்யா பவன் நுழைவுவாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
‘‘மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறேன்’’ என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
‘மருத்துவர்களின் ஒரு மாதகால போராட்டத்தால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்’ என்று மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவர்கள், ‘‘மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் 93,000 பேர். ஆனால், 7,500 ஜூனியர் மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 4 பேரின் காவலை செப்.23 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.