புதுடெல்லி: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ரூ.9 கோடி மதிப்பிலான 18.56 கிலோ தங்கக்கட்டிகளை முனியாத் அலிகான், முகமது அலி மற்றும் ஷோகத் அலி ஆகியமூவர் கடந்த 2020-ல் கடத்தினர். எமர்ஜென்சி டார்ச் விளக்கின் பேட்டரிக்குள் தங்கக்கட்டிகளை இவர்கள் பதுக்கி வைத்து கடத்தியதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் முக்கியக் குற்றவாளியான முனியாத் அலிகான் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் 2021-ல்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்டர்போல் அமைப்பினால் பயங்கர குற்றவாளியாக இவர் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, முனியாத் அலிகானையும் இவரது கூட்டாளிகளையும் இன்டர்போல்,என்ஐஏ உதவியுடன் சிபிஐ தேடி வந்தது.
இதில் முகமது அலி மற்றும்ஷோகத் அலி ஆகிய இருவரும் ரியாத்தின் இன்டர்போல் அதிகாரிகளிடம் சில மாதங்களுக்கு முன்பு சிக்கினர். கடந்த 2023 ஆக.17-ம்தேதி முகமது அலி பிடிபட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதிஷோகத் அலி கைது செய்யப்பட்டுஇந்தியா அழைத்துவரப்பட்டார்.
இந்நிலையில் சவுதி அரேபியாவிலிருந்து ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்குத் தங்கக்கட்டிகளை கடத்தி அனுப்பும் நடவடிக்கையில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஈடுபட்டு வந்த முனியாத் அலிகான் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடமாடுவதாக சிபிஐக்கு துப்பு கிடைத்தது.
என்ஐஏ, இன்டர்போல்இணைந்து நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் முனியாத் அலிகான் ‘இன்டர்போல்’ அதிகாரிகளிடம் சிக்கினார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானம் மூலம்இந்தியா கொண்டுவரப்பட்ட அவரை என்ஐஏ அதிகாரிகள் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.