இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இதுவரை இல்லாத அளவில் இப்போது நடைபெறும் போர் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் இடைவிடாமல் நடத்தும் தாக்குதல்களால் அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோல் ஹமாஸ் நடத்தும் பதில் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், காசாவின் ரபா பகுதியில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
காயமடைந்த வீரரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த “யான்ஷுஃப்” ஹெலிகாப்டர், காசாவில் உள்ள ரபா பகுதியில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
எதிரிகளின் தாக்குதல் காரணமாக விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானப்படையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.