திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையைச் சேர்ந்தவர் ஓவியர் சபரிநாதன். இவர் கூழாங்கல், சாக்பீஸ், தேங்காய் சிரட்டை, அப்பளம் ஆகிய பொருள்களில் தமிழர் வாழ்வியலை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.
இதுகுறித்து ஓவியர் சபரிநாதனிடம் பேசினோம். இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே மரங்கள், பறவைகள், பொம்மைகளை நானாவே வரைந்தேன். இதனால் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்த என் அப்பாவும் என்னை ஊக்கப்படுத்தினார். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கேரள மாநிலம் திருச்சூருக்கு சுற்றுலா சென்றிருந்தோம்.
அங்குள்ள அரண்மனையில் ரவிவர்மாவின் ஓவியங்களை அப்பா காட்டினார். அப்போது முதல் ஓவியங்கள் மீது பெரிய காதல் ஏற்பட்டு விட்டது. தொடர்ச்சியாக நிறைய படங்களை வரைந்து கொண்டே இருந்தேன்.
குஜிலியம்பாறையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு டிப்ளமோவில் 2 ஓவியப் படிப்புகளை படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு திருமணம் முடிந்து ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சிறுவயதில் இருந்தே வரைவில் இருந்த ஆர்வத்தினால், பென்சில் ஆர்ட், வாட்டர் கலர் பெயிண்டிங், போஸ்டர் பெயிண்டிங், அக்ரலிக், ஆயில் பெயிண்டிங், க்ரையான்ஸ் ஆர்ட், பென் ஆர்ட் என அனைத்து வகையான ஓவியங்களை கற்றேன்.
இருப்பினும், ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூழாங்கற்களில் வரைந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இதையடுத்து சாக்பீஸ்களில் காந்தி, நேதாஜி, நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட 25 தலைவர்களின் படங்களை வரைந்தேன். பிறகு தேங்காய் சிரட்டை ஓடுகளில் 18 சித்தர்களை வரைந்தேன்.
இவ்வாறு வித்தியாசமான முறையில் ஓவியங்களை வரைவதை பார்த்து என்னிடம் 60-க்கும் மேற்பட்டா மாணவர்கள் தனிப்பட்ட முறையில் ஓவியம் கற்றுக்கொள்ள வருகின்றனர். அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஓவியக் கல்லூரிகளில் சேர்ந்து சினிமாத்துறை, டெக்ஸ்டைல்துறைகளில் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அப்பளம் வைத்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அப்பளம் சாப்பிட விரும்புவார்கள். ஏன் நாம் அதில் வரையக் கூடாது எனத் தோன்றியது.
உடனே அப்பளத்தில் வரைவதற்கான ஏற்பாடுகளை செய்து, இளவட்ட கல் தூங்குவது, தேர் இழுப்பது, வயல் வேலை செய்வது என்பன போன்ற தமிழர் வாழ்வியலை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைந்தேன். இந்த ஓவியங்கள் சமூகவலைதளங்களில் பரவியதை தொடர்ந்து எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.
இன்றைய இளையதலைமுறையினர் செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர். அவர்கள் மனஅழுத்தமின்றி வாழ ஏதேனும் கலையில் ஈடுபட வேண்டும். அதில் ஓவியம் மிகவும் எளிமையானது. அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
மிகுந்த பொருளாதார சிரமத்தில் என் குடும்பம் உள்ளது. பகுதிநேர ஆசிரியாக இத்தனை ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு பணிநிரந்தரம் வழங்கினால், பொருளாதார பிரச்னையின்றி மாணவர்களுக்கு ஓவியங்களை வரைக் கற்றுக் கொடுப்பேன்” என்றார்.