தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்: ஃபோர்டு, ஐடிசர்வ் கூட்டமைப்புக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: அமெரிக்காவில் ஃபோர்டு மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணிமாநிலமாக உள்ளது. பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சியுடன் உள்ளது. தமிழகத்தில் அதிகஅளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்க்க துறை சார்ந்த கொள்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின்போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த10-ம் தேதி சிகாகோவில் ஃபோர்டுநிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அமெரிக்காவின் 2-வது பெரியஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம், உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ‘‘தமிழகத்தில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும், உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், ஃபோர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி, ஃபோர்டு இந்தியா இயக்குநர் ஸ்ரீபாத் பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பு 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்டரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்ப்பதுடன், சிஎஸ்ஆர், ஸ்டெம் முயற்சிகள் மூலம் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துகிறது. ஐடிசர்வ் கூட்டமைப்பு உயர்திறமை பணியாளர்களின் குடியேற்றத்துக்கு சட்ட உதவி வழங்குகிறது.

இந்த கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுத்தார். ஐடிசர்வ் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜெகதீஸ் மொசாலி, இயக்குநர்கள் சிவ மூப்பனார், சம்ப மொவ்வா, சிகாகோபிரிவு தலைவர் சதீஷ் யலமஞ்சிலிஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுகளில், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.