சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) வருடாந்திர நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பணிச் சுமை கருதி வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் தற்போது 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிகளுக்கான குறைந்தபட்ச வேலை நாட்கள் 220 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கற்றல், கற்பித்தல், தேர்வுகள் உள்ளிட்ட பணிகளுக்கு 210 வேலை நாட்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் திருத்தப்பட்ட நாள்காட்டியை பின்பற்றி செயல்படுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.