விஜயவாடா: படகுகளை மோதவிட்டு பிரகாசம் தடுப்பணையை உடைக்க முன்னாள் முதல்வர் ஜெகன் சதி செய்துள்ளார் என ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் சமீபத்தில் பெய்த கன மழையால் விஜயவாடா நகரே வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 47 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில் விஜயவாடாவில் கிருஷ்ணா நதி மீது கட்டப்பட்டுள்ள பிரகாசம் தடுப்பணையின் தூண்கள் மீது 3 படகுகள் வெள்ளத்தில் மிதந்து வந்து மோதின. இதில் அந்த தூண்களில் கீறல் விழுந்தது. இதனால் சில மதகுகளும் சேதம்அடைந்தன. சங்கிலிகள் அறுந்தன.அந்தப் படகுகள் இன்னும் சற்று வேகமாக வந்து மோதியிருந்தால் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர ஐ.டி. துறை அமைச்சரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷ் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில், “பிரகாசம் அணை மீது மோதிய படகுகள் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகொடியின் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது வேண்டுமென்றே செய்த சதிச் செயலாகும். தூண்கள் இடிந்து விழுந்திருந்தால், அணையின் வெள்ளம் விஜயவாடா நகரை முழுவதுமாக மூழ்கடித்திருக்கும். லட்சக்கணக்கான மக்கள் ஜல சமாதி அடைந்திருப்பார்கள். இந்தப்பழியை தெலுங்கு தேசம் அரசு மீதுபோடுவதற்காக ஜெகன் செய்தசூழ்ச்சி இது. கடவுளின் கருணையால் அவ்வாறு நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஒடிசாவின் புரி அருகே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, ஆந்திர கடலோர மாவட்டங்களான காகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாபல்லி, கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரியில் நேற்றும் கன மழை தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அனகாபல்லி மாவட்டத்தில் தாண்டவா, வராஹா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பல கிராமங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா நேற்று பார்வையிட்டார்.