கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதாகாமல் இருக்க அப்பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மம்தா பணம் தர முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வீடியோ எடுத்திருக்க வேண்டுமா? இதனை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் மறுத்தார். “ஆதாரங்களை காட்டுங்கள். நான் எங்கே அவ்வாறு கூறினேன். இதெல்லாம் பொய், அவதூறு, சூழ்ச்சி’’ என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக பெண் மருத்துவரின் பெற்றோர் நேற்று கூறும்போது, “நாங்கள் பொய் சொல்வதாக முதல்வர் கூறுகிறார். எங்களிடம் ஆதாரங்களை கேட்கிறார். எங்களுக்கு பணம் வழங்கப்படும் என்று கூறும்போது நாங்கள் வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறாரா? முதல்வர்தான் பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறார். நீங்கள் பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் என்றும் அவர் கூறினார். இதற்கு எனது மகளுக்கு நீதி கிடைத்தவுடன் உங்கள் அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று பதிலளித்தேன்” என்றனர்.