கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே காணியாளம்பட்டி பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உள்ள வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி அந்த பேக்கரியில் தின்பண்டங்களை வாங்கிச் செல்வதோடு, பணம் கொடுக்காமல் சென்றுவிடுவதாக தெரிகிறது. இந்நிலையில், இதேபோல் வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பர்த்டே கொண்டாடிய லோகேஷ், சங்கர், நிகிலேஷ், நரேன், பிரசாந்த், இளையராஜா, சந்துரு, கண்ணன், பாரதிராஜா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மீண்டும் பேக்கரி கடைக்கு வந்து தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் இரு சக்கர வாகனத்தை அதிக சத்தத்துடன் இயக்கியதோடு, மறுபடியும் பேக்கரி கடை முன்பாக நிறுத்தியுள்ளனர்.
அப்போது, பேக்கரி கடையில் இருந்தவர்கள், ‘எதற்காக இப்படி செய்கிறீர்கள்?’ எனக் கேட்டபோது, அவர்களை தாக்கியும், பேக்கரி கடையை சேதப்படுத்தியிருக்கின்றனர். மேலும், பாப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் அருகே விநாயகர் சிலையை கரைத்துவிட்டு சாலையில் வந்தபோது, அவர்களையும் மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதில், பாப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன், சதீஷ்குமார், தினேஷ் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதில் ஒரு இளைஞரை 5-க்கும் மேற்பட்ட போதை இளைஞர்கள் கடுமையாக தாக்கும் வீடியோவும் வெளியாகி, தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவம் அறிந்து பாதிக்கப்பட்ட பாப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், பேக்கரி கடை உரிமையாளர், உறவினர்கள் சம்பவ இடத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு போதையில் கடை மற்றும் சாலையில் சென்ற இளைஞர்களை அடித்து தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர்களிடமிருந்து புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி, கும்பலை கலைத்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது. அதோடு, 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காயமடைந்த பாப்பனம்பட்டியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்களை தாக்கிய வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுபோதையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள், அங்கிருந்த இளைஞர்களையும், பொதுமக்களையும் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.