சென்னை: பொங்கல் விழா கொண்டாட்டம் ஜனவரி 13-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 13-ம் தேதி (திங்கள்) போகி, 14-ம் தேதி (செவ்வாய்) பொங்கல் பண்டிகை, 15-ம் தேதி (புதன்) மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி (வியாழன்) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ரயிலில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.12) தொடங்குகிறது.
அதாவது, ஜன.10-ம் தேதி (வெள்ளி) பயணம் செய்வதற்கு நாளை முன்பதிவு செய்யலாம். அதேபோல, ஜன.11-ம் தேதி (சனி) பயணம் செய்ய வரும் 13-ம் தேதியும், ஜன.12-ம் தேதி பயணத்துக்கு வரும் 14-ம் தேதியும், ஜன.13-ம் தேதி போகி அன்று பயணம் செய்ய வரும் 15-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர் செல்ல பயணிகள் தற்போது திட்டமிட்டு வருகின்றனர். தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். காத்திருப்பு பட்டியல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது, வாய்ப்பு உள்ள விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.