ஶ்ரீவில்லி. அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலின் ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்கள் மீட்பு 

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்களை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பெயரில் பட்டா பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் மாவட்டம் தோறும் கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் உட்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் கோயில் பெயரில் உள்ள நிலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. ஆய்வின் போது, ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான 388 ஏக்கர் நிலம் கோயில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி கோசாகியர்பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணையில் கோயில் பெயரில் நிலங்களை மாற்ற அறங்காவலர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்களையும் கோயில் பெயரில் மாற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று மாலை கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் மாரிமுத்து மற்றும் நில அளவையர் ஆகியோர் கோயில் நிலங்களை ஆய்வு செய்து, வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், “வத்திராயிருப்பு வட்டம் கோட்டையூர் கிராமம் மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, அளவீடு பணிகள் நிறைவடைந்து உள்ளது. கோயில் பெயரில் பட்டா பெற்று, நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.