DD Neelakandan: `10 ஆண்டுகளில் 4-வது சர்ஜரி; மீண்டு வருவது வலி மிகுந்தது' – டி.டி.நீலகண்டன் உருக்கம்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தொகுப்பாளினி டி.டி.நீலகண்டன். மறுபடி எப்போது அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார், மீண்டும் முழு நேரமாக அவரை எப்போது பார்க்கலாம் என இப்போதும் சின்னத்திரை ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், டி.டி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்து கொண்ட சர்ஜரி குறித்துப் பகிர்ந்திருந்தார்.

டி.டி.நீலகண்டன்

அதில், “கடந்த மூன்று மாதங்களாக எனக்கான நேரத்திற்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடைய மூட்டுக்காக ஒரு சர்ஜரி செய்து கொண்டேன். மொத்தமாக மூட்டு மாற்றும் சர்ஜரி.

இது கடந்த பத்து ஆண்டுகளில் என் மூட்டுக்காக நான் செய்துகொண்ட நான்காவது சர்ஜரி. என் வலது காலில் நான் செய்துகொண்ட கடைசி சர்ஜரியாக இது இருக்கும் என நம்புகிறேன்; வேண்டிக் கொள்கிறேன். அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் வலி மிகுந்ததாகவே இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு என்னை திரையில் நேசிக்கும், எப்போதும் ஆதரவாக இருக்கும், என் வலியை அனுதாபித்தவர்களுக்காக இதைப் பதிவுசெய்கிறேன். இப்போதும் இத்தனை எதிர்பாராத அன்பு கிடைத்ததற்கு நான் என்ன செய்தேன் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்களாக எனக்காக வேண்டிக் கொண்ட, எனக்கு பக்கபலமாக இருந்த மக்களுக்கு என் இதயத்திலிருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். இப்போது ஒரு வெளிச்சம் இருக்கிறது.. மிகுந்த பலத்துடன் திரும்பி வருவேன் என உறுதியளிக்கிறேன்.

என்னுடைய மருத்துவர்களுக்கும், எப்போதும் என் பக்கம் நிற்கும் என்னுடைய குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும் பெரிய நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக என்னை வாழ்த்தி என்னுடன் இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், தயவுசெய்து என் அருகில் வந்து ஹாய் சொல்லுங்கள், எத்தனை நல்லுள்ளங்கள் என்னை ஆசீர்வதித்தார்கள் என்பதை எண்ண விரும்புகிறேன்.

இன்னும் உறுதியாக உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். புதிய மூட்டு! புதிய நான்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக, கமென்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

மீண்டு வாருங்கள் டி.டி!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.