Kadaisi Ulaga Por: "சினிமாவில் தோற்றால் பேராசிரியர் ஆவேன்; திறமையோடு படிப்பு முக்கியம்"-ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் தமிழா இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் திரைப்படம் ‘கடைசி உலகப் போர்’.

நாசர், நட்டி, அனஹா, அழகன் பெருமாள், முனிஷ் காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். போர், ஆக்‌ஷன், காதல், கருத்து என உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் சுந்தர்.சி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

‘கடைசி உலகப் போர்’

இதில் பேசியிருக்கும் ஹிப்ஹாப் ஆதி, ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் குறித்தும் சினிமாவிற்கு வருபவர்களுக்குத் திறமையோடு படிப்பும் முக்கியம் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் குறித்துப் பேசியவர், “தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் மூன்றாவதாக ஒரு ‘உலகப் போர்’ நடந்தால் உலகமே இருக்காது என்று நினைக்கிறேன். அதானல்தான் இப்படத்திற்குக் ‘கடைசி உலகப் போர்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். போர், காதல், ஆக்‌ஷனுடன் சேர்த்து ஆழமான கருத்தையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கின்றன. இவற்றை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொண்டு, வரவேற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சுந்தர். சி சார்தான் என் திறமைக்கு வாய்ப்புக் கொடுத்து இசையமைக்க வைத்தவர். என் படத்தையும் தயாரித்தவர். இப்போது இந்த ‘கடைசி உலகப் போர்’ படத்தை நானே தயாரித்திருக்கிறேன். இதிலிருந்து லாபம் வந்தால் மட்டுமே இனி திரைப்படங்களைத் தயாரிப்பேன்.

‘ஹிப்ஹாப் தமிழா என்டர்டைமண்ட்’ நிறுவனத்தை இரண்டு பேராக ஆரம்பித்தோம். இப்போது எங்களுடன் 110 பேர் இருக்கிறார்கள். திறமையானவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்துக் கொண்டேயிருக்கிறோம். சினிமாவிற்கு வரும் இளம் தலைமுறையினர்களுக்குப் படிப்பு ரொம்ப முக்கியம்.

ஹிப்ஹாப் ஆதி

திறமை மட்டும் இருந்தாலும் சாதித்துவிடலாம். ஆனால், திறமையோடு படிப்பும் இருந்தால்தான் யாரிடமும் கை கட்டாமல் தலைநிமிர்ந்து இருக்கலாம். படிப்புதான் அந்த தைரியத்தைக் கொடுக்கும். இன்று நான் சினிமாவில் தோல்வியடைந்தாலும், கல்லூரியில் பேராசிரியராக என் வாழ்க்கையைத் தொடர்வேன். எனக்கு எந்தப் பயமுமில்லை. எனது இந்த தைரியத்திற்குக் காரணம் எனது படிப்புத்தான்.

அதனால்தான் திறமையோடு படிப்பும் ரொம்ப முக்கியம் என்று என் ரசிகர்களுக்கு அழுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

சமீபத்தில் கோயம்புத்தூரில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கலந்து கொண்ட நிகழ்ச்சியல் நடந்த நெரிசலால் நடந்த சண்டை சமூகவலைதளங்களில் காணொலியாக வைரலாகியிருந்தது. இதுகுறித்துப் பேசிய ஹிப்ஹாப் ஆதி, “25,000 பேர் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். அதில் கொண்டாட்டத்துடன் நடனமாடும்போது ஒரு பத்து பசங்க தள்ளு முள்ளுவில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொண்டார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டோம். இந்தச் சண்டை அங்கிருந்த மீதி பேருக்குத் தெரியவே தெரியாது. சமூகவலைதளங்களில்தான் அது பெரிதாகப் பேசப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில் ‘Music Entrepreneurship’ என்ற பிரிவில் ‘ஹிப் ஹாப்’ ஆதி பி.எச்.டி முடித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.