அனிருத் இசையில் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியோடு மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘அருணாச்சலம்’ திரைப்படத்தின் ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்ற பாடலுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கிறது மலேசியா வாசுதேவனின் குரல். சரியாக 27 வருடங்களுக்குப் பிறகு இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. எந்தவொரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அது ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுக்கும். அதுபோல இந்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியால் சினிமாவுக்கு கொண்டு வரப்படும் மறைந்த ஆளுமைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்கிறார்கள்.
இளையராஜா கூட்டணி
மூன்று தசாப்தங்களாக ஒரு ஸ்டார் பாடகராக வலம் வந்தார், மலேசியா வாசுதேவன். அது மெலடி பாடலானானும் சரி, மாஸான ஹீரோ கொண்டாட்டப் பாடலானாலும் சரி, அதில் இவர்தான் மாஸ்டர். ஆயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். அதுவும் அதிகமாக இசைஞானி இளையராஜாவின் இசையில்தான் பாடியிருக்கிறார். இசைஞானியைத் தாண்டி 70 களிலிருந்து 90-கள் வரை பிரபலமாக இருந்த அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி ஹிட் பாடல்களை அடுக்கினார் மலேசியா வாசுதேவன்.
அன்றையே தேதியில் இவருடைய குரல் படத்தில் வரும்போது அது ரஜினியின் குரல் என்றே மக்கள் அடையாளப்படுத்தினார்கள். அந்தளவிற்கு மலேசியா வாசுதேவன் பாடல்கள் ரஜினிக்குச் சரியாகப் பொருந்திப் போனது. மலேசியா வாசுதேவனின் பாடல்களில் ரஜினி நடித்து நடனமாடும்போது அது ரஜினியின் அசல் குரலாகவே கருதி மக்கள் கொண்டாடினார்கள். அப்படியான கெமிஸ்டரி இவர்கள் இருவருக்கும் இடையிலிருந்திருக்கிறது. குறிப்பாக ரஜினி பாடல்களில் எவர்கீரினாக கொண்டாடப்படும் பாடல்களின் லிஸ்டில் இவர் பாடியதே அதிகமாக இருக்கும்.
பொதுவாக என் மனசு தங்கம்
ரஜினி நடிப்பில் 1980-ல் வெளியான திரைப்படம் ‘பில்லா’. பில்லா திரைப்படம் என்றதும் அதன் அக்ஷன் காட்சிகளைத் தாண்டி நம் நினைவுக்கு வருவது அத்திரைப்படத்தின் பாடல்கள்தான். முக்கியமாக, ‘வெத்தலையை போட்டேண்டி’ என்ற பாடல் அந்த ஆல்பத்தில் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் பாடலைப் பாடியவர் மலேசியா வாசுதேவன்தான். இதைத் தாண்டி முரட்டுக் காளை படத்தில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ , மாப்பிள்ளை படத்தில் வரும் ‘என்னோட ராசி நல்ல ராசி’, ‘அடுத்த வாரிசு’ படத்தில் வரும் ‘ஆசை நூறு வகை’, ‘எஜமான்’ படத்தில் வரும் ‘எஜமான் காலடி மண்ணெடுத்து’ , ‘தர்ம யுத்தம்’ படத்தில் வரும் ‘ஆகாய கங்கை’ , ‘அருணாச்சலம்’ படத்தின் ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ போன்ற மலேசியா வாசுதேவன் ரஜினிக்குப் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்தான்.
இதில் அறிமுக பாடல்களும், கதாபாத்திரம் மாற்றமடையும் தருணங்களில் வரும் மாஸ் பாடல்களுமே அதிகம். ரஜினியின் மாஸ் என்ட்ரிக்கேற்ப மலேசியா வாசுதேவனின் ஓங்கிய குரல் பொருந்திப் போனதுதான் ‘இதுதான் ரஜினியின் உண்மையான குரல் போல’ என மக்கள் நம்பியதற்கு முக்கிய காரணம். ரஜினிக்குப் பாடல்கள் மட்டுமல்ல ரஜினியுடன் சேர்ந்து ‘ஊர்க்காவலன்’ படத்திலும் மலேசியா வாசுதேவன் நடித்திருக்கிறார்.
ரீமிக்ஸ் பாடல்கள்
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது இன்றைய தேதியில் நிலவும் எவர்கிரீன் டிரண்டுகளில் ஒன்று. அப்படி அந்த டிரண்ட்டை பின்பற்றி ரஜினியின் பழைய ஆல்பத்திலிருந்து ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல்கள் அத்தனை இருக்கிறது. அதிலும் பெரும்பாலானவை மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களிலிருந்துதான் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். கடைசியாக இவர் ரஜினிக்கு ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ பாடலைப் பாடியிருந்தார். அதன் பிறகு ரஜினியின் படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடவில்லை.
இனி இந்த கூட்டணியில் வரும் பாடல்களைத் திரையில் அனுபவிக்க முடியாதோ என்ற ஏக்கத்தையெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறது ஏ.ஐ.,. மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் வாசுதேவன் இப்பாடலைப் பாடியிருக்கிறார். அதன் பிறகு ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியோடு அவரின் தந்தை குரலுக்கு அப்படியே மாற்றி அசல் வடிவம் கொடுத்து மலேசியா வாசுதேவனின் குரலை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.