வெற்றிமாறன், சூரி கூட்டணியின் ‘விடுதலை 2’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கிப் பரபரக்கிறது. சென்னை அருகே உள்ள வண்டலூரில் கிளைமாக்ஸ் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்போடு, ‘விடுதலை 2’வின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. இயக்குநர் வெற்றிமாறனும் பல பேட்டிகளில், “இப்போது எடுத்து வரும் ‘விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் ‘வாடி வாசல்’ படத்தை ஆரம்பிப்பேன்” எனச் சொல்லியிருந்தார். இந்நிலையில், சூர்யாவின் ரசிகர்கள் ‘வாடி வாசல்’ விரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
சூர்யாவிற்கு ‘காக்க காக்க’ படத்தைத் தயாரித்த தாணு தயாரிப்பில் சூர்யா- வெற்றி மாறன் இருவரும் இணையும் படமாக ‘வாடி வாசல்’ தொடங்கியது. இயக்குநர் அமீர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் எனப் பிரமாதமான டீம் உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு வாழ்வியலைச் சொல்லும் படமிது என்பதால், படத்தின் ஜல்லிக்கட்டுக் காட்சிகளுக்காகக் காளைகளுடன் பயிற்சி செய்ய, இரண்டு காளைகளை சூர்யா வாங்கி வளர்த்து வருகிறார். இந்த படத்தின் திரைக்கதையிலும், ஃப்ரீ புரொடக்ஷனிலும் சில ஆண்டுகளாக வெற்றிமாறன் தீவிரமாக இயங்கி வருகிறார்.
‘வாடி வாசல்’ அறிவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே சென்னையில் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி போல அரங்கம் அமைத்து, தென் தமிழகத்திலிருந்து ஓங்கு தாங்கான 60 ஜல்லிக்கட்டுக் காளைகளும், மாடுபிடி வீரர்களும் கொண்டு, சூர்யா நடிப்பில் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. சீறி வரும் காளைகளை சூர்யா அடக்குவது போலப் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். மதுரை அலங்காநல்லூரில் உள்ள நிஜ மாடுபிடி வீரர்கள் பலரும் அதில் நடித்திருந்தனர். இவர்கள் படத்திலும் இடம்பெறலாம் என்று அப்போது சொல்லப்பட்டது.
இது குறித்து தயாரிப்பாளர் தாணு கூட, ”இப்படத்தின் அறிவிப்பு வந்த சில நாள்களிலேயே ஒரு மூன்று நாள்கள் படப்பிடிப்பு எடுத்தோம். அப்போதே அதிலிருக்கும் ஆபத்துகளை உணர்ந்தோம். படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக அமெரிக்காவில் ‘ஜூராஸிக் வேர்ல்டு’ படத்தில் பணியாற்றிய கலைஞர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறோம். குறிப்பாக அந்தப் படத்தை எடுக்க உறுதுணையாக இருந்த ஜான் ரோல்டனிடமும் ஆலோசித்து வருகிறோம்.” என்கிறார் தாணு.
இந்நிலையில் ‘விடுதலை பாகம் இரண்டு’ படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் ‘வாடி வாசல்’ படப்பிடிப்பு குறித்து அப்டேட் கிடைக்கும் என்றும், ப்ரீ புரொடக்ஷனுக்காக வெற்றி மாறன் விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பறக்கவிருக்கிறார் என்றும் தகவல் வருகிறது.