சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள சஞ்சவுலி பகுதியில் கட்டப்பட்ட மசூதி ஒன்றின் அங்கீகரிக்கப்படாத பகுதியை இடிக்க முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர்.
சிம்லாவின் சஞ்சவுலி பகுதியில் மசூதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்துக்கு எதிராக அப்பகுதி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவபூமி சங்கர் கமிட்டி சார்பில் கடந்த 5 மற்றும் 11ம் தேதிகளில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின்போது, மசூதியின் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் அகற்றப்பட வேண்டும் என்றும், இமாச்சலத்துக்கு வரும் வெளியாட்கள் குறித்து பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, சிம்லாவில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், மசூதியின் இமாம், வக்ஃப் வாரியம் மற்றும் மசூதி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் நலக் குழு, சிம்லா நகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், அங்கீகரிக்கப்படாத பகுதியை சீல் வைக்குமாறும், நீதிமன்ற உத்தரவின்படி அந்த பகுதியை தாங்களே இடிக்க அனுமதிக்குமாறும் கோரி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லிம் நலக் குழு உறுப்பினர் முப்தி முகமது ஷாபி காஸ்மி, “சஞ்சவுலியில் அமைந்துள்ள மசூதியின் அங்கீகரிக்கப்படாத பகுதியை இடிக்க சிம்லா நகராட்சி ஆணையரிடம் அனுமதி கோரியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
சஞ்சவுலி மசூதியின் இமாம், “எங்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. நாங்கள் பல பத்தாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இமாச்சலப் பிரதேசவாசி என்ற முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அமைதியாக இருக்க விரும்புகிறோம். அதற்கு சகோதரத்துவம் நிலவ வேண்டும்.” என்று தெரிவித்தார்.
முஸ்லிம்களின் இந்த முடிவுக்கு தேவபூமி சங்கர் கமிட்டி வரவேற்பு தெரிவித்துள்ளது. “முஸ்லிம் சமூகத்தின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். சமூக நலன் கருதி இந்த முடிவை எடுத்ததற்காக அவர்களை ஆரத்தழுவுவோம்” என்று கமிட்டியின் உறுப்பினர் விஜய் சர்மா குறிப்பிட்டார்.