புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் தாக்கப்பட்டு, அவர்களது பெண் தோழி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஒட்டு மொத்த சமூகத்துக்கான அவமானம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாஜக ஆளும் மாநிலங்களில் கிட்டத்தட்ட சட்ட ஒழுங்கு இல்லை என்றும் சாடியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் மோவ் கன்டோன்மன்ட் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் தங்களது இரு தோழிகளுடன் செவ்வாய்க்கிழமை மோவ் – மண்டலேஸ்வர் பகுதியில் சுற்றுலா தலம் ஒன்றுக்குச் சென்றனர். புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ராணுவ அதிகாரிகளைத் தாக்கி அவர்களது தோழிகளில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தஹு. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் தாக்கப்பட்டு, அவர்களது பெண் தோழி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான அவமானமாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் கிட்டத்தட்ட சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான பாஜகவின் எதிர்மறையான அணுகுமுறை மிகுந்த கவலை அளிக்கிறது.
குற்றவாளிகளின் இந்த அடாவடித்தனம் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தோல்வியாகும். இதனால் நாட்டில் நிலவும் பாதுகாப்பற்றச் சூழல் இந்தியாவின் மகள்களின் சுதந்திரம் மற்றும் விருப்பங்களை தடைசெய்துவிடும். சமூகமும் அரசும் வெட்கப்பட வேண்டும், தீவிரமாக யோசிக்க வேண்டும். நாட்டின் பாதி மக்கள் தொகையை பாதுகாக்கும் பொறுப்பைக் கண்டுகொள்ளாமல், இன்னும் எவ்வளவு காலம் கண்மூடிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.