வாராணசி: பாரதியார் நினைவு நாள் நேற்று (செப்.11) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் வாராணசி அனுமன் படித்துறைக்கு அருகில் அமைந்துள்ள சுப்பிரமணிய பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், அங்கு பாரதியார் வசித்த வீட்டில், தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பாரதியார் நினைவகத்துக்கும் சென்றனர். அங்கு, இந்திய மொழிகள் துறைத் தலைவர் பேராசிரியர் திவாகர் பிரதான், வரலாற்றுத் துறை பேராசிரியர் கங்காதரன், தமிழ்ப் பிரிவின் முனைவர் த.ஜெகதீசன் ஆகியோர் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பாரதி குறித்த வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும், பாரதி குறித்த ஆய்வுகளைப் பற்றியும் அங்கு கூடியிருந்த மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதையடுத்து இந்திய மொழிகள் துறையில் அமைக்கப்பட்டுள்ள பாரதி இருக்கையின் சார்பில் பாரதியார் 103-ம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற இந்தி மொழி பேராசிரியர் அவதேஷ் பிரதான், ‘இந்திய மறுமலர்ச்சியும் சுப்பிரமணிய பாரதியும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளின் மறுமலர்ச்சி கவிஞர்களை பாரதியுடன் ஒப்பிட்டுப் பல கருத்துகளையும், பாரதியின் படைப்புகள் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து பாரதியின் பேத்தி முனைவர் ஜெயந்தி முரளி, புவியியல் துறை பேராசிரியர் கௌணமணி ஆகியோர் பாரதியாரின் சில பாடல்களைப் பாடினர். நிகழ்வில் பிற மொழித்துறைகளின் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.