அஜ்மீர் (ராஜஸ்தான்): பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவில் 4,000 கிலோ எடையுள்ள சைவ சமபந்தி விருந்து, பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அஜ்மீர் ஷெரீப் தர்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவில் 4,000 கிலோ சைவ சமபந்தி விருந்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தர்கா நிர்வாகி சையத் அஃப்ஷான் சிஷ்டி, “பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, 4,000 கிலோ சைவ உணவுகளை தயார் செய்வோம். அரிசி, நெய், உலர் பழங்கள் உள்ளிட்டவை கொண்டு சுத்தமான சைவ உணவுகள் தயாரிக்கப்படும். பின்னர் சமபந்தி விருந்து மூலம் சுற்றியுள்ள மக்களுக்கு வழங்கப்படும். இந்திய சிறுபான்மை அறக்கட்டளை மற்றும் அஜ்மீர் ஷெரீப்பின் சிஷ்டி அறக்கட்டளை மூலம் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடன் வாழவும், நாட்டின் அமைதி, ஒற்றுமை, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் (துவா) செய்வோம். அன்றைய தினம், விளக்கேற்றுவது முதல் உணவு விநியோகம் வரை அனைத்தும் மிகுந்த பக்தியுடனும் அக்கறையுடனும் நடத்தப்படும்.
தர்காவில் டெக் எனப்படும் உலகின் மிகப்பெரிய சமையல் பாத்திரங்களில் ஒன்று உள்ளது. இது, 4,000 கிலோ வரை உணவு தயாரிக்கும் திறன் கொண்டது. இந்த பாத்திரத்தைக் கொண்டு நாங்கள் விருந்து தயாரிப்போம். அன்றைய தினம் இரவு முழுவதும் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கூடி, குர்ஆன் வசனங்கள் மற்றும் பக்திப் பாடல்களை ஓதுவார்கள். நாட்டின் நலனுக்காகவும், மனிதகுலத்தின் நலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் ஒற்றுமை பிரார்த்தனைகளுடன் இந்நிகழ்வு நிறைவடையும்” என்று தெரிவித்தார்.