காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் அமேசான் மழைக்காடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அமேசான் பாதுகாப்பு (Amazon Conservation) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காலநிலை மாற்றத் தடுப்பில் அமேசான் மழைக்காடு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அவற்றில் 40 சதவிகித காடுகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான் காடுகளுக்கும், காலநிலை மாற்றத்திற்கும் என்ன சம்மந்தம்?
காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் ‘கார்பனை’ உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது அமேசான் மழைக்காடுகள். ஒரு ஆண்டுக்கு 2 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை அமேசான் மழைக்காடுகள் உறிஞ்சுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இது உலகில் வெளியிடப்படும் கார்பன்- டை-ஆக்சைடின் மொத்த அளவில் கிட்டதட்ட 5 சதவிகிதம் ஆகும். இதனால் அதிகளவில் வெப்பம் குறைக்கப்படுகிறது.
அமேசான் காடுகள் கார்பனை எப்படி உறிஞ்சுகிறது?
நம் வீட்டில் வைத்திருக்கும் செடி எப்படி நம்மைச் சுற்றியிருக்கும் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சுகிறதோ, அதே ஃபார்முலாதான் இங்கேயும்… ‘ஒளிச்சேர்க்கை’ (Photosynthesis). ஒரு மரம் ஆண்டுக்குச் சராசரியாக 25 கிலோ கார்பன்-டை-ஆக்சைடை ஒளிச்சேர்க்கை மூலம் உறிஞ்சுகிறது. கிட்டதட்ட 390 பில்லியன் மரங்களைக் கொண்ட அமேசான் காடுகள், மேலே குறிப்பிடப்பட்டதுபோல ஆண்டுக்கு 2 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சுகிறது.
அதுமட்டுமல்ல…
நீருடன் கூட இந்த காடுகளுக்கு சம்பந்தம் உள்ளது. ஆம்… இந்த மழைக்காடுகள் உலகில் பெய்யும் மழைப்பொழிவுகளுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் தினமும் 20 பில்லியன் டன் நீராவிகளை அமேசான் மழைக்காடுகள் சுற்றப்புறத்தில் வெளியிடுகிறது. இது நீர் சுழற்சி (water cycle), நீர் இருப்பு, சுத்தமான காற்று போன்றவற்றுக்கு உதவும்.
அறிக்கை கூறுவதாவது…
இந்நிலையில், அமேசான் பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 40 சதவிகித அமேசான் காட்டுப் பகுதிகள் எந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன. இந்த பகுதிகள் பெரு, பிரேசில், பிரெஞ்சு கயானா (French Guiana), சுரிநாம் (Suriname) ஆகிய நாடுகளில் உள்ளன.
இதில் பிரேசில், சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் அமேசான் காடுகளைப் பாதுகாக்கும் அளவானது 51 சதவிகிதம் குறைந்துள்ளது. பெரு நாட்டில் அமேசான் காடுகள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும், அங்கே பாதுகாப்பில்லாமல் இருக்கும் காடுகளில் மரம் வெட்டுதல் நடந்து வருகிறது.
புவி வெப்பமயமாதல்…
கார்பன் டை ஆக்ஸைடு (Carbon di-oxide), மீத்தேன் (Methane), நைட்ரஸ் ஆக்ஸைடு (Nitrous Oxide), ஓசோன் (Ozone) மற்றும் நீராவி (Water vapour) ஆகியவைப் பசுமைக்குடில் வாயுக்கள். வளிமண்டலத்தில் இருக்கும் இந்த வாயுக்கள் சூரியனிலிருந்து வரும் வெப்பத்தைப் பூமிக்குள்ளே இருத்தி வைத்துக்கொள்ள உதவுகிறது. அப்படி வைத்துக்கொள்ளாவிடில், பூமி முழுவதும் பனி படர்ந்த பிரதேசங்கள் உருவாகிவிடும்.
முக்கியமாக, இந்த வாயுக்கள் தான் உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுந்த இடமாகப் பூமியை வைத்திருக்கின்றன. ஆனால் இந்த வாயுக்கள் அளவுக்கு அதிகமாக உயரும்போது, பூமியில் வெப்பம் அதிகமாகிறது. இதனால் புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது… காலநிலை மாற்றம் ஏற்படுகிறது.
ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
மேலே குறிப்பிட்டிருப்பதுபோல அமேசான் காடுகள் கார்பனை உறிஞ்சி, தன்னுள் வைத்திருக்கின்றன. ஒருவேளை இந்த இடங்களில் காட்டுத் தீயோ அல்லது அதிக மர வெட்டுதலோ நடந்தால், அங்கே உள்ள கார்பன் எல்லாம் மேல் எழும்பும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் புவி வெப்பமயமாதல் அதிகமாகி, காலநிலை மாற்றம் ஏற்படும்.
40 சதவிகித காடுகள் பாதுகாக்கப்படாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதில் எதாவது அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில் எத்தனை மில்லியன் டன் கணக்கில் கார்பன்கள் வெளியேறும், அது பூமியை இன்னும் வெப்பமாக்கும், இதனால் பனிப்பாறை உருகுதல், வெள்ளம் போன்றவை ஏற்படுமா போன்ற கேள்விகள் எழுகின்றன.