Doctor Vikatan: சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்ட பிறகு… பிளட் டெஸ்ட் எடுக்க காரணம் என்ன?

Doctor Vikatan: சில ரத்தப் பரிசோதனைகளை சாப்பாட்டுக்கு முன்பும் சிலதை சாப்பிட்ட பிறகும் செய்யச் சொல்ல என்ன காரணம்? எந்த டெஸ்ட்டை எப்போது எடுக்க வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.  

பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

திடமாகவோ, திரவமாகவோ உணவு எடுத்துக்கொண்ட பிறகு அந்த உணவானது வயிறு அல்லது சிறுகுடலில் போய் உடைக்கப்படும். பிறகு அந்த உணவு மேலும் சிறிதாக உடைக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தால் உறிஞ்சப்படும். அப்படி ரத்தத்தில் கலந்ததும் ரத்தச் சர்க்கரை அளவுகள் தவறாக அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது சாப்பிட்டு முடித்ததும் நீரிழிவுக்கான ரத்தப் பரிசோதனை செய்தால் கண்டிப்பாக ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகத்தான் காட்டும். 

ரத்தச் சர்க்கரை மட்டுமல்ல, இரும்புச்சத்து பரிசோதனை, கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் சாப்பிடுவதற்கு முன், ஃபாஸ்ட்டிங்கில் செய்ய வேண்டும்.  அதாவது குறைந்தபட்சம் 9 முதல் 12 மணி நேரம் ஃபாஸ்ட்டிங் இருந்த பிறகே செய்ய வேண்டும். எந்த டெஸ்ட்டை எப்போது செய்ய வேண்டும் என்ற வரைமுறையைப் பின்பற்றாமல் செய்யும்போது, சர்க்கரையோ, கொலஸ்ட்ராலோ அதிகமாகக் காட்டுவதால், அதை அடிப்படையாக வைத்தே மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்க வேண்டியிருக்கும். 

ரத்தப் பரிசோதனை | Blood test

எந்தெந்த டெஸ்ட்டுகளை ஃபாஸ்ட்டிங்கிலும் எந்தெந்த டெஸ்ட்டுகளை சாப்பிட்ட பிறகும் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். ரத்தச் சர்க்கரை, லிப்பிட் புரொஃபைல்  எனப்படும் கொலஸ்ட்ரால் பரிசோதனை, கிட்னி ஃபங்ஷன் டெஸ்ட், சிறுநீர்ப் பரிசோதனை, லிவர் ஃபங்ஷன் டெஸ்ட், ரத்ததத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதிக்கும் அயர்ன் டெஸ்ட் போன்றவற்றை ஃபாஸ்ட்டிங்கில் செய்ய வேண்டும்.

கீரை உள்ளிட்ட இரும்புச்சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிட்ட உடன், அது சிறுகுடலுக்குப் போய், பிறகு ரத்தத்தில் கலந்துவிடும்.  அதனால் ஹீமோகுளோபின் அளவுகள் தவறுதலாக அதிகமாகக் காட்டலாம். 

ரத்தச் சர்க்கரைக்கு ஃபாஸ்ட்டிங்கில் மட்டுமன்றி, சாப்பிட்ட பிறகான பிபி  (Postprandial) டெஸ்ட்டும் எடுக்க வேண்டும். மூன்று மாத ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவைத் தெரிந்துகொள்ளும் ஹெச்பிஏ1சி (HbA1C ) டெஸ்ட்டையும் ஃபாஸ்ட்டிங்கில்தான் கொடுக்க வேண்டும். எல்லா ஹார்மோன் டெஸ்ட்டுகளையும் ஃபாஸ்ட்டிங்கில் செய்வதுதான் சரி.

HbA1c

டெஸ்ட் கொடுப்பதற்கு முன் புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக் கூடாது. சூயிங்கம் மெல்லக்கூடாது. சூயிங்கத்தில் உள்ள சர்க்கரைகூட ரத்தச் சர்க்கரை அளவை மாற்றிக் காட்டலாம் என்பதால்தான் அதைத் தவிர்க்கச் சொல்கிறோம். உடற்பயிற்சிகள் செய்து முடித்ததும் ரத்தப் பரிசோதனை செய்தாலும் அது மாற்றிக் காட்டலாம். தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள், அதற்கான மாத்திரை எடுக்காமல்தான் டெஸ்ட் செய்ய வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.