பிரபல விருதுகளில் ஒன்றான எம்மி விருதினை முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த விர் தாஸ் தொகுத்து வழங்க இருக்கிறார்.
சிறந்த திரைப்படங்களுக்கு உயரிய விருதான ஆஸ்கர் வழங்கப்படுவதுபோல டி.வி மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு மிக உயரிய விருதான `எம்மி விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளின் சிறப்பம்சமே இதில் பிரைம் டைம் எம்மி, டே டைம் எம்மி, ஸ்போர்ட்ஸ் எம்மி தொடங்கி சர்வதேச எம்மி வரை பல்வேறு வகைகள் உண்டு. இந்த விழாக்கள் வருடந்தோறும் அதற்கே உரிய பிரத்யேக விதிமுறைகளுடன் நடத்தப்படும். இந்த விருதினை இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நடத்தி வருகிறது.
இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான சர்வதேச எம்மி விருதுகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இம்முறை முதன்முறையாக எம்மி விருதினை இந்தியாவைச் சேர்ந்த நடிகரும், இயக்குநரும், நகைச்சுவை கலைஞருமான விர் தாஸ் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற எம்மி விருதில் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பான ‘Vir Das: Landing’ என்ற இவருடைய படைப்புக்கு சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருது கிடைத்தது. தற்போது 2024- ம் ஆண்டிற்கான சர்வதேச எம்மி விருதை தொகுத்து வழங்குவது குறித்து விர் தாஸ், “உங்கள் அன்புக்கு நன்றி. ஓர் இந்தியராக சர்வதேச விருதை தொகுத்து வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
விர் தாஸ் கிட்டத்தட்ட 35 நாடகங்கள், 100-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகள், 18 திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். 2019-ம் ஆண்டில், அவர் அமெரிக்க தொலைக்காட்சியில் ‘Whiskey Cavalier’ என்ற தொடரிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.