GNSS vs FASTag : ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு சுங்கக்கட்டண வசூல் நடைமுறைப்படுத்துவது தொடர்பான செய்திகள் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் சுமூகமான இயக்கத்தை எளிதாக்குவதற்காகவும், நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு தடையற்ற இலவச சேவையை வழங்குவதற்காகவும் சுங்கக்கட்டணங்களை தவிர்க்காமல் வசூலிப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பயணத்திற்கு மட்டுமே பயனர்கள் கட்டணம் செலுத்தினால் போதும்.
தேசிய நெடுஞ்சாலைகள், நிரந்தர பாலங்கள், பைபாஸ்கள், சுரங்கப்பாதைகள் என சுங்கச்சாவடிகளில் இரு திசைகளிலும் 20 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் அல்லது வாகனங்களுக்குப் பொறுப்பான தனிநபர்களுக்கு கட்டணம் இருக்காது. இருபது கிலோமீட்டருக்கும் அதிகமாக பயன்படுத்தும்போது, பயணித்த உண்மையான தூரத்தின் அடிப்படையில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (ஜிஎன்எஸ்எஸ்) ஆன்-போர்டு யூனிட்கள், ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ஏஎன்பிஆர்) சாதனங்கள் மற்றும் ஃபாஸ்டேக் சிஸ்டம்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் அடங்கும். இத்தொழில்நுட்ப வழிமுறைகள் மூலமாகவோ அல்லது அவற்றின் கலவை மூலமாகவோ பயனர் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.
GNSS சாதனம், பயனர் கட்டண வசூல் நோக்கத்திற்காக GNSS உடன் இணைக்கும் வாகனங்களில் மாற்ற முடியாத மற்றும் நிலையாக பொருத்தப்பட்ட தொழில்நுட்பமாக இருக்கும். கட்டண வசூல் செயல்முறையை மேலும் சீரமைக்க, GNSS ஆன்-போர்டு யூனிட்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ஒரு பிரத்யேக பாதை ஒன்றும் உருவாக்கப்படும். இந்த பாதையில் GNSS ஆன்-போர்டு யூனிட் இல்லாமல் நுழையும் வாகனங்கள் சுங்கச்சாவடிக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
GNSS vs FASTag
தற்போதுள்ள FASTag அமைப்பு வாகனக் கண்காணிப்பு மற்றும் சார்ஜிங்கிற்கு இயற்பியல் சுங்கச்சாவடிகளை நம்பியுள்ளது என்றால், GNSS தொழில்நுட்பமானது சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் விர்சுவல் (மெய்நிகர்) சுங்கச்சாவடிகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த மெய்நிகர் சாவடிகள், ஜிஎன்எஸ்எஸ்-இயக்கப்பட்ட வாகனங்களுக்காக பிரத்தியேகமாக வாகனத்தின் தூரம் மற்றும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும். அதாவது, காரின் வகை, பதிவு எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற அத்தியாவசிய வாகனத் தகவல்களையும் கொண்டிருக்கும்.
GNSS அமைப்பு தற்போதுள்ள FASTag அமைப்புடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, FASTags இலிருந்து GNSS தொழில்நுட்பத்திற்கு பயணிகள் இயல்பாக மாறலாம். FASTag அறிமுகமான பிறகு, சுங்கக் கட்டணங்கள் வசூலிப்பது சுலபமாகியிருந்தாலும், ட்ராஃபிக் அதிகமாக இருக்கும்போது, நெரிசல் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. GNSS இந்த நெரிசலை தவிர்ப்பதுடன், தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும்.
சுங்கச்சாவடிகளில் பிரத்யேக ஜிஎன்எஸ்எஸ் பாதைகள் அமைக்கப்படும் என்பதால் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான இடிசி பொருத்தப்பட்ட வாகனங்கள் எந்த இடையூறும் இல்லாமல், சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும். GNSS அடிப்படையிலான ETC, நாளடைவில் அனைத்து பாதைகளுக்கும் விரிவாகும். இது படிப்படியாக மாறும் என்றாலும், சுங்க வசூல் திறன் மற்றும் வசதிகளில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிக்கிறார்.
ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூலின் நன்மைகள்
காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைகிறது
சராசரி காத்திருப்பு காலமான 714 வினாடிகளை 47 வினாடிகளாக குறைத்துவிடும்
பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது
போக்குவரத்து நெரிசல் குறையும்
கூடுதல் சுங்கச்சாவடிகள் இல்லாமலேயே வாகனங்களின் சீரான ஓட்டம் உறுதி செய்யப்படும்
பயனர்கள் அவர்கள் பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தலாம்
சுங்கச்சாவடி பராமரிப்பு மற்றும் கட்டுமானத்துடன் தொடர்புடைய செலவுகள் குறையும்