கோவை அன்னர்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம், அரசியல் பிரச்னையாக மாறி பாஜக-வுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பிரச்னை குறித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் முன்னிலையில் கூறிய கருத்து சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரத்துக்கு பின்னர் சீனிவாசன், நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கோரினார்.
பொதுவாக மன்னிப்பு கோரினால், பிரச்னை முடிவுக்கு வரும். இந்தப் பிரச்னையில் மன்னிப்பு கேட்ட பிறகு தான் அது பூதாகரமாக வெடித்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவில் அண்ணாமலையின் ஆதரவாளர்களே இந்த அரசியலை விரும்பவில்லை.
“என்ன இருந்தாலும் அவர் தங்கள் தொழிலின் பிரச்னையை சொன்னார். அந்த நிகழ்வில் கூட அவர் தொடக்கத்தில் பாஜக அரசை பாராட்டியுள்ளார். அப்படி இருக்கும்போது, மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிடப்பட்டது தவறு. அண்ணாமலையே இதை விரும்ப மாட்டார். தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.” என்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.
பாஜக கொங்கு அரசியலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. அங்கு பிரதானமாக உள்ள கவுண்டர், நாயுடு, அருந்ததியர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய அண்ணாமலை 4.5 லட்சம் வாக்குகளை பெற்றார்.
தொழில்துறையினரும், நாயுடு சமுதாயத்தினரும் பாஜகவுக்கு ஆதரவளித்த காரணத்தால், அதிமுகவை விட அதிக வாக்குகளை வாங்கியிருந்தனர் என்பது கோவையில் சொல்லப்படும் வாக்கு கணக்கு.
கோவையில் அரை நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வரும் அன்னபூர்ணா உணவகம், முக்கிய அடையாளமாக உள்ளது. அன்னபூர்ணா சீனிவாசன் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே அவருக்கு நடந்த இந்த சம்பவத்தை தொழில்துறையினரும், நாயுடு சமுதாயத்தினரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என பாஜகவே நினைக்கிறார்கள். அதனால் இது தேர்தல் அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் யோசிக்கிறார்கள்.
இதன் காரணமாகதான் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் எதிர்ப்பையும் மீறி, அண்ணாமலை ஆதரவாளர்கள் இந்தப் பிரச்னையில் அன்னபூர்ணாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இதன் விபரீதத்தை உணர்ந்த அண்ணாமலை லண்டனில் இருந்து சீனிவாசனுக்கு போன் செய்து பேசி, தனிப்பட்ட சந்திப்பில் நடந்த வீடியோவை வெளியிட்டதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இது தொடர்பான அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், ‘We Miss You, சீக்கிரம் வாங்க தலைவா’ என்று கமென்ட் செய்து வருகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், அண்ணாமலையே வந்தாலும் சரி செய்ய முடியாதளவுக்கு பிரச்னை தீவிரடைந்துள்ளது என்பதையே கள நிலவரம் உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY