புதுடெல்லி: கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்தை சுட்டிக்காடி ‘ஆணவம் மிக்க பாஜ அரசு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் அதனை காங்கிரஸ் கட்சியினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த வீடியோக்களை மேற்கோள் காட்டி அது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், நமது மக்கள் பணியாளர்களிடம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஆனால் இந்த அரசு அவரது கோரிக்கையை ஆணவத்தோடு அணுகியுள்ளது. அவரை அவமரியாதை செய்துள்ளது.
ஆனால், அவரைப் போன்ற சிறு முதலாளியாக இல்லாமல் பெரும் பணக்காரராக இருந்து சட்ட விதிகளை மாற்றக் கோரியிருந்தால், தேசிய உடைமைகளையே சொந்தம் கொண்டாட விரும்பியிருந்தால் அவர்களுக்கு மோடி சிவப்புக் கம்பளம் விரித்திருப்பார்.
நமது தொழில்துறையினர் ஏற்கெனவே பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடவே கடுமையான வங்கி நடைமுறைகளும், வரி விதிப்புகளும், ஜிஎஸ்டியும் அவர்களை வாட்டுகிறது. இவை எல்லாம் பத்தாது என அவர்கள் இப்படி அவமதிக்கப்படுகிறார்கள்.
அதிகாரத்தில் இருப்போரின் நான் எனும் அகந்தை மேலோங்கும் போது அவமானப்படுத்துதல் தான் அவர்களின் எதிர்வினையாக அமைகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் பல ஆண்டுகளாக வரி சிக்கல் உள்ளிட்டவற்றில் இருந்து நிவாரணம் கோரி வருகின்றனர். ஆனால் இந்த ஆணவ அரசு அவர்களுக்கு செவிசாய்த்திருந்தால் எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி விதிப்பு முறையைக் கொண்டுவந்து லட்சக் கணக்கான தொழில் முனைவோரின் பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடந்தது என்ன? தமிழகம் வருகை தந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாக பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடலையும் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கோவை கொடிசியா அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசினார்.
அப்போது, “உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு இருக்கிறது. ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள்” என்பது குறித்து சீனிவாசன் சில நிமிடங்கள் பேசினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்றும் வேகமாக பரவியது. இந்நிலையில்தான் மத்திய அரசுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.