அம்ரோஹா: உத்தரப் பிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹில்டன் பப்ளிக் பள்ளியில் மதியம் சாப்பிட இறைச்சி பிரியாணி கொண்டுவந்த மாணவனை பள்ளியை விட்டு சஸ்பெண்ட் செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிஆர்சி) உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஹில்டன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் அவினிஷ் குமார் சர்மா, மாவட்ட குழந்தைகள் நல குழு (சிடபில்யூசி) முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தவிட்டுள்ளது.
செப்.6-ம் தேதி பள்ளியின் முதல்வருக்கும், பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாருக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் உணவு பழக்கவழக்கங்களை வைத்து பள்ளியில் பாகுபாடு காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது. பிரச்சினை பூதாகரமாகி மாநில பள்ளிக் கல்வித் துறையின் கவனத்துக்குச் சென்றது. இதன் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகம் விசாரணை நடத்தியது. நடந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் மீது தவறில்லை என்று நிர்வாக விளக்கம் அளித்தது. இருப்பினும் விசாரணை முடியும் வரை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
இதனிடையே, இந்த விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், நாட்டின் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான உச்சபட்ச அமைப்பான என்சிபிசிஆர், இந்த விவகாரம் குறித்து புதிகாக விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் தியாகிக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது. குழந்தைகள் நலக் குழு தலைவர் அதுலேஷ் குமார் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விவாகாரம் குறித்து சிடபில்யூசி சிறார் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் கீழ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும் அவர், குழந்தைகள் மீதான துன்புறுத்தல் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க குழுவுக்கு உள்ள அதிகாரத்தினையும் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கூறுகையில், “அன்று பள்ளியில் நடந்த அந்த சம்பவம் என் குழந்தைகள் அனைவரையும் உலுக்கி விட்டது. அவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்லவே அச்சப்படுகிறார்கள். பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் எனக்கு திருப்தி இல்லை. என் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க நான் நீதிமன்றத்தையும் நாடுவேன்” என்று தெரிவித்திருந்தார். மேலும், தன்னுடைய குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்ற மாவட்ட கல்வித் துறையை நாடியதாக வந்த செய்தியினை அவர் மறுத்துள்ளார்.
முன்னதாக, சம்மந்தப்பட்ட மாணவனை வேறு பள்ளிக்கு மாற்ற தேவையான உதவியை அரசு தலையிட்டு வழங்கும் என்று அம்ரோஹா மாவட்ட கல்வி ஆய்வாளர் விஷ்ணு பிரதாப் தெரிவித்திருந்தார். மேலும், மாணவன் இதுவரை படித்துவந்த ஹில்டன் பப்ளிக் பள்ளியின் கல்விக் கட்டணத்தில் பாக்கி வைத்திருந்த ரூ.37,000 தொகையை மாணவனின் பெற்றோர் செலுத்தத் தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது.