டெல் அவில்: காசாவில் உள்ள பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
மத்திய காசாவில் உள்ள ஐ.நா நடத்தும் அல்-ஜவுனி பள்ளி மீது புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா ஊழியர்கள், ஹமாஸ் போராளிகள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் உடலை இஸ்ரேலிய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது.
நாளுக்கு நாள் இஸ்ரேல், காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திவரும் நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரஸ், அல்-ஜவுனி பள்ளி மீதான தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கான தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். பாலஸ்தீன பகுதியில் நடக்கும் பயங்கரமான வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
தற்போதுவரை காசா மீதான இஸ்ரேலின் போரில் 41,118 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 95,125 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும், 200-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 நாட்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.