“கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் பிளான் செய்தனர்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: “மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் கார் பந்தயம் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த F4 கார் பந்தயத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (செப்.13) நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “விளையாட்டுத் துறையை சார்ந்த அத்தனை பேருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கார் பந்தயம் நடந்து முடியும் வரை அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வேலை செய்த தூய்மை பணியாளர்களுக்கும் என்னுடைய நன்றிகள். இதனை நடத்துவதற்கான மிகப்பெரிய சவாலே இந்த பந்தயம் மிக முக்கியமான ஒரு பகுதியில் நடந்ததுதான். மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர். ஆனால் ஒரு பக்கம் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் டிராபிக் சரியான முறையில் நகர்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்து நம்மை விமர்சித்தவர்கள் கூட பாராட்ட தொடங்கிவிட்டனர்.

சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். இது F4 பந்தயம் தான். F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும். இதுகூட தெரியாத அறிவாளிகள்தான் இது கார் ரேஸா, நாய் ரேஸா என்று நம்மை விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். கார் பந்தயம் தேவையா? அவசியமா? என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இதை நடத்தவில்லை என்றாலும் விமர்சித்திருப்பார்கள்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.