ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிஷ்துவாரின் சாட்ரோ பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர்.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.