ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி அவசர அனர்த்த நிலை ஏற்பட்டால் அந்தத் தடங்கலை முடிந்த வரை நிவர்த்தி செய்து வாக்காளர்களுக்கு வாக்குகளை வழங்குவதற்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் வசந்த குணரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நேற்று (12) இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட அனர்த்த முகாமைத்துவக் குழுவினருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது சப்ரகமுவ மாகாணக் கல்விச் செயலாளர் சாமர பமுணுஆரச்சி, இரத்தினபுரி மேலதிக மாவட்ட செயலாளர் கயானி ஐ. கருணாரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர் அமில விஜேரத்ன, மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுரங்க அம்பகஹதென்ன, மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பவித்ர தயாரத்ன, இரத்தினபுரி பிரதி அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் முதித மஞ்சுல, மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இரத்தினபுரி மாவட்டம் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்த அடிக்கடி இடம்பெறும் ஒரு மாவட்டம் என்பதுடன், இங்குள்ள 18இற்கும் அதிகமான பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.