சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 79 ஆயிரத்து 672 ஏக்கர் விளை நிலங்கள் 33 ஆயிரத்து 283 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகியான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக கோயில்களுக்குச் சொந்தமான 80 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகை பாக்கியைக்கூட முறையாக செலுத்துவதில்லை. எனவே கோயில்களுக்கு சொந்தமான விளை நிலங்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆஜராகி தாக்கல் செய்திருந்த அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 22-ன் கீழ் மாநிலம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான விளை நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அதன்படி கோயில்களுக்கு சொந்தமான 1 லட்சத்து 22 ஆயிரத்து 802 ஏக்கர் விளை நிலங்களில் சுமார் 79 ஆயிரத்து 672 ஏக்கர் விளை நிலம் 33 ஆயிரத்து 283 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
எஞ்சிய நிலங்களை குத்தகைக்கு விட முடியாத அளவுக்கு இடையூறுகள் உள்ளதால் யாரும் அதை குத்தகைக்கு எடுக்கவில்லை. குத்தகை தொகையை வசூலிக்க துணை ஆட்சியர் தலைமையிலான வருவாய் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 31 வரை, 3 ஆயிரத்து 564 வழக்குகள் தொடரப்பட்டு, அதில் ஆயிரத்து 278 வழக்குகளில் விசாரணை முடிந்து குத்தகை பாக்கியாக ரூ. 5.51 கோடியை வழங்க குத்தகைதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் சொத்துக்களை பாதுகாக்க அறநிலையத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிலசீர்த்திருத்தத்துறை ஆணையர் 12 வாரங்களுக்குள் பரிசீலித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.