சென்னை: “தொழில் செய்கிற ஒருவர் பலமுனை ஜிஎஸ்டியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியதற்காக அவரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் பாஜகவின் பாசிச போக்கையே வெளிப்படுத்துகிறது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
மக்களை சந்திக்காமலேயே, வாக்குகளை பெறாமலேயே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்று மத்திய அமைச்சராக நீண்டகாலமாக நீடித்து வருகிற நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்குக்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது, பாரம்பரியமிக்க அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் முறையற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். அவர் பேசும் போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பலமுனைகளில் 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் என வரி விதிக்கப்படுகிறது. இனிப்பு வகைகளுக்கு 5 சதவிகிதம், கார வகைகளுக்கு 18 சதவிகிதம், பன்னில் கிரீம் தடவினால் 18 சதவிகிதம் என பலவிதமான வரி விதிக்கப்படுகிறது.
ஆனால், பன்னுக்கு வரியில்லை. அதில் கிரீம் தடவினால் வரி விதிக்கப்படுவது நுகர்வோர் மத்தியில் கேட்கப்படுகிற கேள்வி குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் கூறிய போது, அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
மேலும், உணவகத்துக்கு வருபவர்கள் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒவ்வொரு ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளை தருகிறது என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்ததற்காக மத்திய நிதியமைச்சர் கேள்வி கேட்பவரை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தப் பின்னணியில் பாஜகவினரின் பல்வேறு மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளான சீனிவாசனை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மூலமாக நிர்ப்பந்தப்படுத்தி நிதியமைச்சரை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வரவழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்.
இந்நிகழ்வு சமூக ஊடகங்களில் பாஜகவினரால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. தொழில் செய்கிற ஒருவர் பலமுனை ஜிஎஸ்டியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியதற்காக அவரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் பாஜகவின் பாசிச போக்கையே வெளிப்படுத்துகிறது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
மக்களை சந்திக்காமலேயே, வாக்குகளை பெறாமலேயே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்று மத்திய அமைச்சராக நீண்டகாலமாக நீடித்து வருகிற நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்குக்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அதற்குரிய விலையை கொடுப்பதிலிருந்து அவர் தப்ப முடியாது. மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சட்டத்தை வளைத்து பல்வேறு சலுகைகள் செய்கிற மத்திய பாஜக அரசு, சாதாரண சிறு, குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து எங்களை காப்பாற்றுகிற வகையில் ஒரே வரியாக மாற்றுங்கள் என்ற கோரிக்கையை பரிசீலிக்க நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை.
இதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று நிர்மலா சீதாராமன் கூறியபோது, ஒரு நிருபர் மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி கேட்ட போது, “இத்தகைய குதர்க்கமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, பாஜக மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பு நிர்மலா சீதாராமனின் அராஜக போக்கு காரணமாக பலமடங்கு கூடிவருவதையும், பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதையும் எவராலும் தடுக்க முடியாது,” என்று அவர் கூறியுள்ளார்.