கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படாததால் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சிமருத்துவர் கடந்த மாதம் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வலியுறுத்தியும், சில அதிகாரிகளை பணிநீக்கம்செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்கு திரும்புமாறு உச்ச நீதிமன்றம் கெடு விதித்த பிறகும், பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் 34-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் களுக்கு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த் அழைப்பு விடுத்தார். இதில் 15 பேர் வரை பங்கேற்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், ‘‘30 பிரதிநிதிகளுக்கு அனுமதி வேண்டும். முதல்வர் மம்தா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்’’ என மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர். இதை அரசு ஏற்காததால் அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
இந்நிலையில், 12-ம் தேதி (நேற்று) மாலை 5 மணிக்கு பயிற்சி மருத்துவர்கள் உடனான சந்திப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த் மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால், நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறும் கூட்ட அரங்குக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை 5 மணிக்கு வந்தார். பேச்சுவார்த்தைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பயிற்சி மருத்துவர்களின் பிரதிநிதிகளுக்காக நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. ஆனால், நேரடி ஒளிபரப்பு செய்யாவிட்டால் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என பயிற்சி மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்தனர். கூட்ட அரங்கில் சுமார் 2 மணி நேரம் வரை முதல்வர் மம்தா காத்திருந்தும், அவர்கள் யாரும் வரவில்லை.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மருத்துவ சகோதர, சகோதரிகளை சந்திக்க நேற்று மாலை 2 மணி நேரமாக. நான், தலைமைச் செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அனைவரும் காத்திருந்தோம். ஆனால், பயன் இல்லை. மருத்துவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களை மன்னிக்கிறோம். 2 மணி நேரமாக காக்க வைத்து, பேச்சுவார்த்தைக்கு வராததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது இல்லை.
எங்கள் அரசு அவமானப்படுத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் அரசியல் சாயம் இருப்பது சாதாரண மக்களுக்கு தெரியாது. இங்குள்ள எதிர்க்கட்சியினருக்கு நீதி தேவை இல்லை. பதவிதான் வேண்டும். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். பதவி பற்றி எனக்கு கவலை இல்லை. நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறேன். மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். அதற்காக, மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு மம்தா கூறினார்.
அமலாக்கத் துறை சோதனை: இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ டாக்டர் சுதிப்தோ ராய் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்று, பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். ‘‘பெண் மருத்துவர் கொல்லப்பட்ட செய்தி பரவிய சில மணி நேரங்களில், சுதிப்தோ ராய் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். எனவே, இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினோம்’’ என்று அதிகாரிகள் கூறினர்.