விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகிறது. இந்த சரணாலயம் அமைந்துள்ள பகுதிகளில் புலி, யானை, காட்டெருமை, மிளா, மான், கரடி, சிறுத்தை மற்றும் அரிய வகை அணில்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்துவருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு, மம்சாபுரம், அத்திதுண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் உள்ளன. மலை உச்சியில் வசித்து வந்த யானைகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அடிவாரப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித் திரிகின்றன.
காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மாமரம், பலா, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். இந்தநிலையில், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. அதன்படி காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர், கடந்த 20 நாள்களுக்கு மேலாக மேளம் அடித்தும், தீ மூட்டம் மூட்டியும் தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் செண்பகத்தோப்பு – அத்திதுண்டு சாலையில் காட்டுயானைகள் சுற்றி வந்துள்ளது. இதனைக்கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரவில், வனபகுதிக்குள் வனத்துறையினர் வாகனத்தில் ரோந்து வந்தபோது காட்டுப்பகுதியில் இருந்து திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை வனத்துறையினர் சென்ற வாகனத்தை மறித்து நின்றது. சிறிதுநேரம் சாலையின் குறுக்காக அங்கும்-இங்கும் நடந்து சென்று போக்குக்காட்டிய காட்டெருமை பின்னர் வனத்துறையினர் வந்த வாகனத்தை தாக்க முற்பட்டது. அப்போது சுதாரித்த வனத்துறையினர், காட்டெருமையை வனபகுதிக்குள் விரட்டினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் வைரலாக பரவிவருகிறது. தொடர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவார பகுதியை சுற்றி வலம்வரும் காட்டு யானைகளை நோட்டமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர்,
“மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் வாகனங்களில் செல்லும்போது கவனமுடன் செல்ல வேண்டும்.
வனப்பகுதிக்குள் வரும் சாலைகளை மாலை நேரத்துக்குப் பிறகு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
யானை மற்றும் ஏனைய வனவிலங்குகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் தாமாக முன்வந்து விலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபட வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.